இந்தியா

ஜெயலலிதா கடனாக பெற்ற ரூ.24 கோடியை வருமானமாக ஏற்றது தவறு: நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு சட்டத்துக்கு புறம்பானது - கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா 2-ம் நாளாக உச்ச நீதிமன்றத்தில் வாதம்

செய்திப்பிரிவு

தமிழக முதல்வர் ஜெயலலிதா வங்கியில் கடனாக பெற்ற ரூ.24 கோடியை வருமானமாக ஏற்க முடியாது. அதை வருமானமாக ஏற்றுக்கொண்ட கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு சட்டத்துக்கு புறம்பானது என கர்நாடக அரசின் மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டார்.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கு உச்ச நீதி மன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், அமித்வா ராய் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசார ணைக்கு வந்தது. அப்போது கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா, 2-ம் நாளாக வாதிட்டதாவது:

1991-96 காலகட்டத்தில் ஜெய லலிதா தமிழக முதல்வராக இருந்த போது ஜெயா பப்ளிகேஷன்ஸ், நமது எம்ஜிஆர் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில் முக்கிய பொறுப்பு வகித்தார். அப்போது இந்தியன் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட வங்கி களில் ரூ.24 கோடியை கடனாக பெற்றார்.

வங்கியில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த வேண்டி இருப்ப தால் அதை வருமானமாக ஏற்க முடியாது என பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா நிராகரித்தார்.

ஆனால் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, கீழ் நீதிமன்றத் தின் தீர்ப்புக்கு மாறாக, கடனை ஜெயலலிதாவின் வருமானமாக ஏற்றுக்கொண்டுள்ளார். இது சட்டத் துக்கு புறம்பானது. மேலும் கடன் தொகையை கணக்கிட்டதில் கூட்டல் பிழையும் நடந்துள்ளதால், தீர்ப்பின் போக்கு மாறியுள்ளது. எனவே வங்கியில் கடனாக பெற்ற ரூ.24 கோடியை வருமானமாக ஏற்க கூடாது.

இதேபோல, 1992-ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த‌ ஜெய லலிதா தனது 44-வது பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாடினார். அப்போது தனக்கு பிறந்தநாள் பரிசாக ரூ.2 கோடியே 15 லட்சம் வந்ததாக ஜெயலலிதா வருமான வரி தாக்கல் செய்துள்ளார். பொது ஊழியருக்கான நன்னடத்தை விதி முறைகளின்படி பதவி காலத்தில் முதல்வரும், அமைச்சர்களும் பெறும் பரிசுகளை அரசு கருவூலத் தில் சேர்க்க வேண்டும். ஆனால் பொது ஊழியரான ஜெயலலிதா பிறந்த நாள் பரிசை கருவூலத்தில் சேர்க்காதது சட்டத்துக்கு புறம் பானது என நீதிபதி குன்ஹா சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் நீதிபதி குமாரசாமி பொது ஊழியருக்கான நன்னடத்தை விதிமுறைகள் முதல் வருக்கும், அமைச்சர்களுக்கும் பொருந்தாது எனக்கூறியுள்ளார். மேலும் தாமாக முன்வந்து பிறந்த நாள் பரிசாக வந்த ரூ.2.15 கோடி யில், ரூ.1.5 கோடியை சட்டப்பூர்வ மான வருமானமாக கணக்கிட்டுள் ளார். இதில் ரூ.75 லட்சத்தை தள்ளு படி செய்ததற்கான காரணத்தை தீர்ப்பில் குறிப்பிடவில்லை. இதைக் காட்டிலும் பொது ஊழியரின் பிறந்தநாள் பரிசை, வருமானமாக ஏற்று கொண்டது மிகப்பெரும் பிழையாகும்.

ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தில் ஜெயலலிதாவும், சசிகலாவும் முக்கிய பொறுப்பு களை வகித்தனர். இந்த நிறுவனத் தில் இருந்து வெளியான நமது எம்ஜிஆர் நாளிதழுக்கு சந்தா மூலம் ரூ.14 கோடி வருமானம் வந்ததாக கூறப்பட்டுள்ள‌து. சொத்துக் குவிப்பு வழக்கில் விசாரணை தொடங்கும் வரை இந்த திட்டம் இருப்பதையே ஜெயலலிதா தரப்பு கூறவில்லை. இவ்வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, திடீரென நமது எம்ஜிஆர் சந்தா திட்டம் மூலமாக ரூ.14 கோடி வருமானம் வந்ததாக கூறினார்கள்.

அதற்கான ஆதாரத்தை நீதி மன்றம் கேட்ட‌ போது, “சந்தா திட்டத் துக்கு வழங்கப்பட்ட ரசீதுகள் காணாமல் போய்விட்டது என்றனர். மேலும் அரைகுறையாக எரிந்த நிலையில் இருக்கும் சில ரசீதுகளை தாக்கல் செய்தனர். இதனை ஏற்க மறுத்த நீதிபதி குன்ஹா, 'நமது எம்ஜிஆர் சந்தா திட்டம் முழுக்க முழுக்க பொய்யாக உருவாக்கப் பட்டது என தீர்ப்பில் குறிப்பிட் டுள்ளார். ஆனால் நீதிபதி குமாரசாமி எவ்வித ஆதாரத்தையும் பார்வையிடாமல் நமது எம்ஜிஆர் மூலமாக வந்த ரூ.14 கோடியை வருமானமாக ஏற்றுக்கொண்டுள்ளார். எனவே உரிய ஆதாரங்களும், சாட்சியமும் இல்லாத நமது எம்ஜிஆர் நாளிதழின் சந்தா திட்டத்தை உச்ச நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும். இவ்வாறு வாதிட்டார்.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை இன்று வியாழக் கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT