லக்கிம்பூர் கெரி கலவரத்தில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்ட வழக்கின் விசாரணையை போலீஸார் தாமதப்படுத்துகிறார்கள், அந்த தோற்றத்தை உடைக்கும் வகையில் விரைவாக விசாரிக்கவும் என உத்தரப்பிரதேச அரசை உச்ச நீதிமன்றம் இன்று சாடியது.
லக்கிம்பூர் கெரிக்கு வந்த மத்திய அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா, உ.பி. துணை முதல்வர் கேசப் பிரசாத் மவுரியா ஆகியோருக்கு எதிராக கடந்த 3-ம்தேதி விவசாயிகள் கறுப்புக் கொடி ஏந்தி போராடினர். அப்போது விவசாயிகளுக்கும் பாஜக ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர்.
இந்த விவகாரத்தில் உ.பி. போலீஸார் இதுவரை மத்திய அமைச்சர் அஜெய் மிஸ்ரா மகன் ஆஷிஸ் மிஸ்ரா உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் அஜெய் மிஸ்ரா மகன் ஆஷிஸ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் விவசாயிகள் உயிரிழந்தது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஹிமா ஹோலி, சூர்யகாந்த் ஆகியோர் அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு இன்று மீண்டு இதே நீதிபதிகள் அமர்வில் இன்று விசாரிக்கப்பட்டது. உ.பி. அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹரிஸ் சால்வே ஆஜராகினார்.
நீதிபதிகல் அமர்வு , உ.பி. அரசு வழக்கறிஞரிடம் கூறுகையில், “ இந்த வழக்கில் போலீஸார் விசாரணையை தாமதப்படுத்துகிறார்கள் என்று நினைக்கிறோம். அந்த தோற்றத்தை உடைக்கும் வகையில் விசாரணையை விரைவுப்படுத்துங்கள். இதுவரை சிஆர்பிசி 164ன் கீழ் 4 சாட்சிகளிடம் மட்டுமே வாக்குமூலம் வாங்கியுள்ளீர்கள். மற்ற சாட்சிகளிடம் ஏன் இன்னும் வாங்கவில்லை” என்று கேள்வி எழுப்பினர்
அதற்கு ஹரிஸ் சால்வே, “சாட்சிகளிடம் வாக்குமூலம் பெற இன்னும் கூடுதல் அவகாசம் தேவை. இதுவரை நடத்தப்பட்ட விசாரணையை அறிக்கையை சீல் வைக்கப்பட்ட கவரில் தாக்கல் செய்துள்ளோம்”என்று தெரிவித்தார்.
நீதிபதிகள் அமர்வு “நாங்கள் உங்களை சீல் வைத்த கவரில் தாக்கல் செய்யக் கோரவில்லையே. சிறப்பு விசாரணைக் குழுவினர் மீதமுள்ள அனைவரிடமும் வாக்குமூலத்தை வாங்கி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
சால்வே பதில் அளிக்கையில் “ குற்றம்சாட்டப்பட்டவர் மீது மாநில அரசு சார்பாக நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர், சிறையில் அடைக்கப்பட்டனர். இன்று 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விவசாயிகள்மீது வாகனத்தை ஏற்றியது, ஒருவரை அடித்துக் கொன்றது என இரு வழக்கு இருக்கிறது” என்றார்
அதற்கு நீதிபதிகள் அமர்வு, “ 44 சாட்சியங்கள் இருப்பதாகக் கூறிவிட்டு, இதுவரை 4 பேரிடம் மட்டுமே வாக்குமூலம் வாங்கியுள்ளீ்ர்கள். எத்தனைபேர் நீதிமன்ற பாதுகாப்பிலும், எத்தனை பேர் போலீஸார் விசாரணையிலும் உள்ளனர்” எனக் கேட்டனர்.
அதற்கு சால்வே பதில் அளிக்கையில் “ குற்றம்சாட்டப்பட்ட 10 பேரில் 4 பேர் போலீஸார் பாதுகாப்பில் உள்ளனர்” என்றார். மற்ற 6 பேர் நிலைமை என்ன, அவர்களை ஏன் போலீஸார் விசாரணைக்கு எடுக்கவில்லை,வழக்கின் நிலை என்ன என்று நீதிபதிகள் அமர்வு கேட்டனர்.
அதற்கு சால்வே பதில் அளிக்கையில் “ மற்ற 6 பேரையும் போலீஸார் விசாரணைக்கு கோரவில்லை” என்றார். அதற்கு நீதிபதிகள் அமர்வு “ போலீஸார் விசாரணை செய்யாதவரை எதையும், யாரையும் கண்டுபிடிக்க முடியாது” என்றனர்.
அதை மறுத்த சால்வே “ அவ்வாறு இல்லை, குற்றம்சாட்டப்பட்டவர்கள் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் தொடர்பான வீடியோ தடவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சாட்சியங்கள் வாக்குமூலத்தை பதிவு செய்ய கூடுதல் அவகாசம்தேவை” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, விரைந்து அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் அமர்வு, வரும் 26-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.