மத்தியில் பாஜக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு மூன்றாவது ஆளுநராக நாகாலாந்தின் அஸ்வினி குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த புதன்கிழமை மாலை ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய அஸ்வினி குமார் (63), உடனடியாக தனது குடும்பத்தினருடன் சிம்லாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.
இதுகுறித்து அஸ்வினி குமார் கூறுகையில், ‘‘எனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவிட்டு ஓய்வுக்காக சிம்லாவுக்கு வந்திருக்கிறேன். இப்போது எனக்கு நிம்மதியாக இருக்கிறது’’ என்றார்.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி யான அஸ்வினி குமார், கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாகாலாந்து ஆளுநராக பதவி ஏற்றார். இவ ருக்கு இன்னும் மூன்றரை ஆண்டு பதவிக்காலம் உள்ளது. எனினும், அவர் பதவியை ராஜினாமா செய்ததற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன.
அஸ்வினி குமார் சிபிஐ இயக்குநராக இருந்தபோது, குஜராத்தில் அமைச்சராக இருந்த வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவரு மான அமித் ஷாவை, சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் கைது செய்தது முதல் காரணமாகக் கருதப்படுகிறது.
இதுதவிர, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நியமிக்கப்பட்ட அனைத்து ஆளுநர்களையும் மாற்ற வேண்டும் என்று நரேந்திர மோடி விரும்புவது மற்றொரு காரணமாகக் கூறப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பு மத்திய உள்துறை செயலாளர் 10-க்கும் மேற்பட்ட மாநில ஆளுநர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ராஜினாமா செய்யும்படி வலியுறுத்தி இருந்தார்.
இதைத்தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநில ஆளுநர் பன்வாரி லால் ஜோஷி மற்றும் சத்தீஸ்கர் ஆளுநர் சேகர் தத் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அந்த வரிசையில் மூன்றாவதாக அஸ்வினி குமார் ராஜினாமா செய்துள்ளார்.
இவர்களைத் தொடர்ந்து மேலும் பல ஆளுநர்கள் விரைவில் ராஜினாமா செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே புதிய ஆளுநர்களை நியமிப்பதற்காக பாஜகவின் மூத்த தலைவர்கள் அடங்கிய பட்டியல் தயாராகி வருகிறது.
வரும் 7-ம் தேதி தொடங்க இருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாகவே புதிய ஆளுநர்கள் பதவி ஏற்றுக் கொள்வார்கள் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.