உத்தரகாண்ட் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 10-ம்தேதி தென் கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலைஉருவானது. இதன் காரணமாக கேரளாவில் பரவலாக மழை பெய்து வந்தது. கடந்த சில நாட்களாக மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்கிறது. கேரளாவில் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 11 மாவட்டங்கள் மழையால் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளன.
இந்தநிலையில் உத்தரகாண்ட் மாநிலத்திலும் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மாநிலத்தின் பெரும்பாலான அணைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் தங்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலரை காணவில்லை. நைனிடால் ஏரி நிரம்பி வழிகிறது.
சால்தி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளத்தில் கட்டப்பட்டு வந்த பாலம் அடித்துச் செல்லப்பட்டது. உள்ளே இருந்த ஒரு கார், கற்பாறைகளுக்கு இடையில் சிக்கியது.
உத்தரகாண்ட் மழை மற்றும் வெள்ள பாதிப்பு நிலவரம் குறித்து பிரதமர் மோடி அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங்கிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். அப்போது மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என பிரதமர் உறுதியளித்துள்ளார்.