பிரதிநிதித்துவப்படம் 
இந்தியா

உலக பட்டினிக் குறியீடு மிகைப்படுத்தப்பட்டது; இந்தியாவில் 3.9% குழந்தைகளே ஊட்டச்சத்துக் குறைவால் பாதிப்பு: மத்திய அரசு தகவல்

செய்திப்பிரிவு

உலக பட்டினிக் குறியீட்டில் இந்தியா குறித்த விவரங்கள் மிகைப்படுத்தப்பட்டவை. இந்தியாவில் 3.9 சதவீதக் குழந்தைகளே ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உலக பட்டினிக் குறியீடு அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஊட்டச்சத்து குறைபாடு, 5 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் சத்துணவுக் குறைபாட்டால் தங்கள் உயர்த்துக்கு ஏற்ற எடை இல்லாமல் இருத்தல், வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாமல் இருத்தல், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தை உயிரிழப்புகள் ஆகிய காரணிகளை அடிப்படையாக வைத்து உலக பட்டினிக் குறியீடு கணக்கிடப்படுகிறது.

2021ஆம் ஆண்டுக்கான உலக பட்டினிக் குறியீட்டில் 116 நாடுகளில் இந்தியா 101-வது இடத்துக்குச் சரிந்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு 107 நாடுகளுக்கான பட்டியலில், 94-வது இடத்தில் இருந்த இந்தியா, 116 நாடுகளுக்கான பட்டியலில் 2021ஆம் ஆண்டில் 101-வது இடத்துக்குப் பின்தங்கியுள்ளது.

கடந்த 1998-2002ஆம் ஆண்டு இந்தியாவில் 5 வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் சத்துணவுக் குறைபாட்டால் தங்கள் உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமல் இருத்தல் சதவீதம் 17.1 ஆக இருந்த நிலையில் 2016 முதல் 2020ஆம் ஆண்டில் இது 17.3 ஆக அதிகரித்துள்ளது.

குழந்தைகளுக்குச் சத்துணவு, சரிவிகித உணவு வழங்குவதிலும், உலக பட்டினிக் குறியீட்டிலும் இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம் 76-வது இடம், வங்கதேசம் 76, மியான்மர் 71, பாகிஸ்தான் 92 ஆகிய இடங்களில் உள்ளன. இருப்பினும் இந்தியாவை விட முன்னேறியிருந்தாலும், சத்துணவு, சரிவிகித உணவுகளை வழங்குவதில் இன்னும் முன்னேற்றம் தேவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், உலக பட்டினிக் குறியீட்டின் அறிக்கையை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது. உலக பட்டினிக் குறியீட்டு அறிக்கை என்பது மிகைப்படுத்தப்பட்டது, ஊதிப் பெரிதாக்கப்பட்டது என்றும், கருத்துக் கணிப்பின் மூலம் எடுக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்கம் வெளியிட்ட அறிக்கையில், “உலக பட்டினிக் குறியீட்டு அறிக்கை மிகைப்படுத்தப்பட்டது, ஊதிப் பெரிதாக்கப்பட்டது.

இந்தியாவில் உள்ள அரசின் புள்ளிவிவரங்கள்படி, அங்கன்வாடிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி 7.79 கோடி குழந்தைகள் உள்ளனர். இதில் 6 மாதங்கள் முதல் 6 வயதுவரை உள்ள குழந்தைகள் உள்ளனர். போஷான திட்டப் புள்ளிவிவரங்கள்படி, இந்தியாவில் 30.27 லட்சம் குழந்தைகள் மட்டுமே ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதாவது 3.9 சதவீதம் குழந்தைகள் மட்டுமே ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். தவறான கணக்கீடுகள் மூலம் இந்தியாவின் சூழல் கணக்கிடப்பட்டு விவரங்கள் ஊதிப் பெரிதாக்கப்பட்டுள்ளன. உலக பட்டினிக் குறியீட்டில் இந்தியாவைக் குறைந்த தரத்தில் காண்பிக்க வேண்டும் என்பதற்காக பாரபட்சமான முறையில் வெளியிட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளது

ஆனால், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை இந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைவால் குழந்தைகள் பாதிக்கப்பட்ட சதவீதம் 14 ஆக இருந்த நிலையில் 2018-2020ஆம் ஆண்டில் இது 15.3 சதவீதமாக உயர்ந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT