இந்தியா

கரோனா 3-வது அலை அச்சுறுத்தல் குறைகிறது: விஞ்ஞானிகள், மருத்துவ நிபுணர்கள் தகவல்

செய்திப்பிரிவு

இந்தியாவில் புதிய கரோனாவைரஸ் ஏதும் கண்டறியப்படா ததால் கரோனா 3-வது அலையின் அச்சுறுத்தல் குறைந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு பிப்ரவரி இறுதியில் இந்தியாவில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. மே, ஜூன் மாதங்களில் இதன் தாக்கம் அதிகரித்து நவம்பர் மாதத்தில் குறையத் தொடங்கியது. ஆனாலும் இந்தாண்டு பிப்ரவரியில் கரோனா 2-வது அலை பரவத் தொடங்கி அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் நாட்டில் லட்சக் கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். அதிக அளவில் உயிரிழப்பும் ஏற்பட்டது. இதுவரை 4.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந் துள்ளனர். தற்போது 2-வது அலையின் பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. தற்போது தினசரி 15 ஆயிரம் பேர் என்ற அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே அக்டோபர், நவம்பர் மாதங்களில் கரோனா வைரஸின் 3-வது அலை ஏற்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். இதைத் தொடர்ந்து 3-வது அலை ஏற்பட்டால் அதை சமாளிப்பதற்கான ஏற்பாடுகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் செய்திருந்தது.

இந்நிலையில், நாட்டில் புதியகரோனா வைரஸ் ஏதும் கண்டறியப்படாததால் 3-வது அலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று விஞ்ஞானிகளும், மருத்துவ நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.

அக்டோபர் மாதத்தின் முதல் 15 நாட்கள் வரை நடத்தப்பட்ட மரபணு வரிசைமுறை மற்றும் பிற ஆய்வுகள் மூலம் வைரஸ்உருமாறுவதற்கான அறிகுறியோஅல்லது புதிய மாறுபாடோ தோன்றவில்லை என்று தெரியவந்துள்ளது. நோய்த்தொற்றுகள் ஏற்படலாம் என்றாலும், அவை பெரும்பாலும் லேசானவையாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இருந்தபோதிலும், அனைவருக்கும் முழுமையான தடுப்பூசி போடப்படும் வரை பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், அதற்கான ஒத்துழைப்பை அரசுக்கு பொதுமக்கள் தரவேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து கர்நாடக மாநில சுகாதாரத் துறை ஆணையர் டி. ரன்தீப் கூறும்போது, "கரோனா வைரஸின் மரபணு வரிசைமுறை உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. மேலும் 10% நேர்மறை மாதிரிகள் தினசரி ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. இதில் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், கரோனா வைரஸின் புதிய மாறுபாடு தோன்றுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தெரியவந்துள்ளது. ஆனாலும், அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது மிகவும் அவசியம்” என்றார்.

SCROLL FOR NEXT