மக்களவையில் நேற்று பூஜ்ஜிய நேரத்தில், விக்கிபீடியா மீது உத்தரப்பிரதேச பாஜக எம்.பி. அஞ்சு பாலா புகார் தெரிவித்தார்.
“கடந்த வாரம் மகளிர் மாநாடு ஒன்றில் நான் பங்கேற்றபோது செய்யுள் ஒன்றை ஒப்பித்தேன். இதன் பிறகு மும்பையில் இருந்து ஒருவர் எனது செயலாளரை போனில் அழைத்தார். ‘டெல்லி யில் மார்ச் 3-ம் தேதி எம்.பி. அஞ்சு பாலா இறந்துவிட்டதாக விக்கி பீடியாவில் கூறப்பட்டுள்ளது. எம்.பி. செய்யுள் பாடும் நிகழ்ச்சி அதற்கு முன் நடந்ததா?’ என்று அவர் கேட்டுள்ளார்.
இது தவிர என்னைப் பற்றி விக்கிபீடியா குறிப்பிட்டுள்ள சில தகவல்கள் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளன. எனவே குற்றம் இழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அஞ்சு பாலா வலியுறுத்தினார்.
இதையடுத்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பேசும்போது, “இந்த சம்பவம் நேற்றுதான் (செவ்வாய்க்கிழமை) எனது கவனத்துக்கு வந்தது” என்றார்.
சட்ட அமைச்சர் சதானந்த கவுடா, “இது தீவிரமான பிரச்சினை. இதற்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்” என்றார்.