தனியார் துறை வேலை வாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக் கான (ஓபிசி) இட ஒதுக்கீடு முறையை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
திமுக மாநிலங்களவை குழு தலைவர் கனிமொழி, மாநிலங் களவையில் கவன ஈர்ப்பு கொண்டு வந்தார். அதில், “1991-ம் ஆண்டு உலகமய பொருளாதார கொள் கையை இந்தியா ஏற்றுக்கொண் டதையடுத்து தனியார் வேலை வாய்ப்பு பெருகி வருகிறது. அதே நேரம் பொதுத்துறை வேலை வாய்ப்புகள் குறைந்து வருகின்றன.
எனவே, சமூக நீதியை நிலை நாட்டும் வகையில் தனியார், பொது தனியார் கூட்டு, கூட்டுறவு மற்றும் அரசுசாரா தொண்டு நிறுவன வேலை வாய்ப்புகளில் ஓபிசி பிரிவினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டை கட்டாயமாக வழங்க சட்டம் இயற்ற வேண்டியது அவ சியம். இது தொடர்பாக தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய (என்சிபிசி) பரிந்துரையை திமுக ஆதரிக்கிறது. எனவே, இது தொடர் பான நடவடிக்கையை அரசு விரைவு படுத்த வேண்டும்” என கூறப்பட்டுள் ளது.
இந்நிலையில் கேள்வி நேரத்தின் போது, இந்திய கம்யூனிஸ்ட் உறுப் பினர் டி.ராஜா “தனியார் துறையில் ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக் கீட்டை அமல்படுத்த வகை செய்யும் சட்டம் இயற்றுமாறு என்சிபிசி மத் திய அரசுக்கு பரிந்துரை செய்துள் ளதா?” என கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் பதில் அளிக்கும்போது, “என்சிபிசியின் பரிந்துரைகளை செயல்படுத்து வதற்கான வழிமுறைகள் குறித்து அரசு ஆய்வு செய்து வருகிறது” என்றார்.
இதையடுத்து, இட ஒதுக்கீடு முறையை தனியார் துறையில் அமல்படுத்துவதற்கு காலக்கெடு ஏதேனும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்று ராஜா உள்ளிட்ட மேலும் சில உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு, “இது தொடர்பாக சிஐஐ, அசோசேம், பிக்கி உள்ளிட்ட தொழிற் சங்க அமைப்புகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இட ஒதுக்கீடு முறை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என அமைச்சர் பதில் அளித்தார்
மேலும் அவர் கூறும்போது, “பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது. அதேநேரம், தனியார் துறையில் வேலை வாய்ப்பு பெருகி வருவது உண்மைதான்” என்றார்.