இந்தியா

மே.வங்க அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் லஞ்சம் வாங்கிய வீடியோ வெளியானதால் சர்ச்சை: திரிணமூல் காங்கிரஸ் மறுப்பு

பிடிஐ

மேற்குவங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த மூன்று அமைச்சர்கள், சில எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் போலியான ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்திடமிருந்து லஞ்சம் வாங்குவது வீடியோவில் பதிவாகியுள்ளது.

ஓர் இணையதள செய்தி நிறுவனம் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டு தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோ பதிவு சித்தரிக்கப்பட்டது, புனையப்பட்டது என திரிணமூல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது. நாரதா நியூஸ் எனும் செய்திச் சேனல் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இந்த ரகசிய வீடியோ பதிவை மேற்கொண்டதாக அந்த செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.

அந்த செய்தி இணையதளத்தின் செய்தியாளர் தன்னை ‘இம்பெக்ஸ் கன்சல்டன்சி’ என்ற போலியான ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தின் பிரதிநிதி என அறிமுகம் செய்து கொண்டு, திரிணமூல் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்களிடம் நிறுவனம் சார்ந்த ஓர் உதவி கேட்கிறார். பதிலுக்கு தலா ரூ. 5 லட்சம் லஞ்சம் கொடுக்கிறார். இதுதொடர்பான நிகழ்வுகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றை நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் அந்த இணையதளம் வெளியிட்டுள்ளது.

ஆனால், இந்த வீடியோக்கள் சித்தரிக்கப்பட்டவை என திரிணமூல் கட்சி தெரிவித்துள்ளது. திரிணமூல் எம்.பி. டெரிக் ஓ பிரையன் கூறும்போது, “இது சித்தரிக்கப்பட்ட வீடியோ. அரசியல் எதிரிகளால் மேற்கொள்ளப்படும் அவதூறு பிரச்சாரம். கேவலான உத்தி. நாங்கள் வெளிப்படையானவர்கள். முதல்வர் மம்தாவின் நற்சான்றிதழ் உயர்தரத்திலானது. வங்க மக்கள் நன்றாக அறிவார்கள். தேர்தலில் மும்முரமாக இருக்கிறோம். இந்த அவதூறு பிரச்சாரத்தால் நாங்கள் கவலைப்படப் போவதில்லை. இந்த வீடியோவை வெளியிட்டவர்கள் மீது அவதூறு வழக்கு தொடரப்படும்” எனத் தெரிவித்தார்.

செய்தி இணையதளத்தின் செய்தியாளர் மேத்யூ சாமுவேல் கூறும்போது, “இதற்கு பின்னணியில் அரசியல் ஏதும் இல்லை. வீடியோ வெளியீடும், தேர்தல் நடைபெறுவதும் ஒரே சமயத்தில் அமைந்தது யதேச்சையானது” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT