இந்தியா

‘‘பஞ்சாப் மீண்டெழ கடைசி வாய்ப்பு….’’- சோனியா காந்திக்கு சித்து பரபரப்பு கடிதம்

செய்திப்பிரிவு

பஞ்சாப் மீண்டெழுவதற்கு கடைசி வாய்ப்பு கிடைத்துள்ளது எனக் கூறி அம்மாநில காங்கிரஸ் தலைவர் சித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பஞ்சாபில் காங்கிரஸ் சார்பில் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும் எம்எல்ஏ நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவி வந்தது. இதில் அமரீந்தரின் விருப்பதை மீறி, மாநில காங்கிரஸ் தலைவராக சித்து கடந்த ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை சித்து ராஜினாமா செய்தார். இதையடுத்து அவருக்கு ஆதரவாக அமைச்சர் ஒருவரும் கட்சி நிர்வாகிகள் மூவரும் பதவி விலகினர். கட்சித் தலைவராக பொறுப்பேற்ற 2 மாதங்களில் சித்து பதவி விலகியது கட்சி மேலிடத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து சித்துவை சமாதானம் செய்யும் முயற்சியில் காங்கிரஸ் தலைமை இறங்கியுள்ளது.

இதனை தொடர்ந்து ராகுலை சந்தித்து பேசிய சித்து, ராஜினாமாவை திரும்ப பெறுவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், அதற்கு முன் கடந்த 15-ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதனை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். அந்த கடிதத்தில் சித்து கூறியுள்ளதாவது:

விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிக்கையில் இடம்பெற உள்ள 13 அம்சங்கள் குறித்து நேரில் ஆலோசனை நடத்த வேண்டும். இதற்காக நேரம் ஒதுக்க வேண்டும்.
பஞ்சாபில் மீண்டெழுவதற்கான கடைசி வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒரு காலத்தில் நாட்டின் பணக்கார மாநிலமாக திகழ்ந்த பஞ்சாப், தற்போது அதிக கடன் சுமை கொண்டதாக மாறியுள்ளது. தற்போது, ஒரு லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அவற்றை நிரப்புவதற்கு தேவையான அளவு நிதிநிலை இல்லை.

குருகிராந்த் சாகிப் கொலைக்கு காரணமான முக்கிய குற்றவாளிகளுக்கும் மற்றும் , பெபல் கலன் மற்றும் கோட்காபூர் துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமானவர்களுக்கும் தண்டனை வழங்கி, பஞ்சாபின் ஆன்மாவிற்கு நீதி கிடைக்க செய்ய வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். போதை மருந்து கடத்தலில் முக்கிய குற்றவாளியை கைது செய்ய வேண்டும்.

மதத்தை அவமதித்த விவகாரம், போதைப்பொருள் விவகாரம், வேளாண் பிரச்னைகள், வேலைவாய்ப்பு, மணல் கொள்ளை, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான திட்டங்கள், மின்சாரம், போக்குவரத்து நெருக்கடி, குறைந்த விலையில் மின்சாரம் ஆகியவை குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரங்கள் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் சரண்ஜித் சிங் சன்னிக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் சித்து தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT