ஜம்மு காஷ்மீ்ர் மாநிலத்துக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் 370 சட்டப்பிரிவை நீக்கியவுடன் பிரச்சினை முழுவதுமாக முடிந்துவிடவில்லை. இன்னும் அங்குள்ள மக்களில் ஒருபிரிவினர் சுதந்திரம் என்ற வார்த்தையை பேசி வருகிறார்கள். அவர்களை பாரதத்தோடு இணைக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.
நாக்பூரில் நேற்று புத்தக வெளியீட்டு விழா நடந்து. இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்றார். அவர் பேசியதாவது:
நான் சமீபத்தில் ஜம்மு காஷ்மீருக்குச் சென்றிருந்தேன். 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டபின் அங்கு முதல்முறையாகச் சென்று பலவற்றைப் பார்த்தேன். அங்கு வளர்ச்சிக்கான வழி பிறந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரைச்ச சேர்ந்த முஸ்லிம் மாணவர்கள் பலரும் ஒரு நிகழ்ச்சிக்காக கடந்தமாதம் மும்பை வந்திருந்தார்கள். அவர்கள் எந்தவிதமான தடையும் இன்றி இந்தியராகவும் இந்தியாவின் ஒருபகுதியாகவும் இருக்க விரும்புகிறார்கள்.
முன்பு ஜம்மு மற்றும் லடாக் பல்வேறு பாகுபாட்டுடன் நடத்தப்பட்டன. 80 சதவீத வளங்கள் காஷ்மீருக்காக மட்டுமே செலவிடப்பட்டன. மக்களுக்கு எந்தவிதமான பயனும் கிடைக்காமல் உள்ளூர் தலைவர்களை அனைத்தையும் அனுபவித்தார்கள்.
ஆனால், தற்போது ஜம்மு காஷ்மீரின் நிலைமை மாறியுள்ளது, மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள். 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டபின், தீவிரவாதிகளுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்போது யாரும் தீவிரவாதிகளுக்கு எதிராக அச்சப்படுவதில்லை.
குழந்தைகள் கரங்களில் புத்தகங்களுக்குப் பதிலாக கற்களைக் கொடுத்த மக்கள் தீவிரவாதிகளைப் புகழ்வதை நிறுத்திவிட்டார்கள். சூழல் மாற்றமடைந்துள்ளது, காஷ்மீரில் தேர்தல் விரைவில் நடக்கும், புதிய அரசு அங்கு உருவாகும்.
ஆனால் சில நேரங்களில் ஜம்மு காஷ்மீரில் தடைகள் அனைத்தையும் நீக்கிவிட்டோம் என கவனக்குறைவாக நினைக்கிறோம். ஆனால், பிரச்சினை முடிந்துவிடவில்லை, 370 சட்டப்பிரிவை ரத்து செய்துவிட்டதால் பிரச்சினை முடிந்துவிட்டதா, 370 சட்டப்பிரிவு பிரச்சினையா? 370 சட்டப்பிரிவு உருவாக்கப்பட்டதற்கான காரணம்தான் பிரச்சினை?
காஷ்மீரில் இன்னும் ஒரு தரப்பு மக்கள் சுதந்திரத்தைப் பற்றிப் பேசிக் கொண்டும், பாகிஸ்தானால் அழுத்தப்பட்டு, மனதில் வகுப்புவாத உணர்வோடுஇன்னும் இருக்கிறார்கள். ஆனால், பலரும் காஷ்மீரில் இந்திய அடையாளத்துடன் இருக்கிறார்கள்.
ஆனால், ஊழல் படித்த தலைவர்கள் பலரும் சிறைக்குச் சென்றுவிட்டதை நினைத்து மக்களில் ஏராளமானோர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அங்கு வளர்ச்சியும் வந்துவிட்டது. ஆனால், இன்னும் அவர்கள் மனதில் நமக்கு சுதந்திரம்கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறார்கள்.ஆதலால் இன்னும் அங்கு பிரச்சினை இருக்கிறது.
பாரத தேசத்துடன் ஜம்மு காஷ்மீரை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளை துரிதப்படுத்த வேண்டும். இந்திய சமூகம் இப்போது நிலவும் நல்ல சூழலைப் பயன்படுத்திக் அவர்கள் அனைவரையும் அணுகி நெருங்கிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஜம்மு காஷ்மீர் மக்கள் இந்திய தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று உணர வேண்டும்
இவ்வாறு மோகன் பாகவத் தெரிவித்தார்.