மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரையின் படி ஊதியம் வழங்க பொது பட்ஜெட்டில் ரூ. 70 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு அமைச்சகங்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியர் களுக்கும் ஊதியம் வழங்க ரூ. 1.02 லட்சம் கோடி தேவைப்படும் என்று தெரிகிறது.
‘மொத்த தொகையில் 60 முதல் 70 சதவீதம் வரை பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யும் நோக்கில் ரூ.70 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கூடுதலாக நிதி ஒதுக்கப்படும்’ என்று நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் 2016-17ம் நிதி ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது. இதனால் அரசுக்கு எந்த அளவுக்கு நிதிச் சுமை ஏற்படும் என்பதை கணக்கிட முடியாது. இருப்பினும் ஒவ்வொரு அமைச்சகத்தின் கீழ் உள்ள துறைகளுக்கு எவ்வளவு தேவைப்படும் என்பதைக் கணக்கிட்டு இத்தொகை ஒதுக்கப்பட்டதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
கடந்த ஜனவரி மாதம் மத்திய அமைச்சரவைச் செயலர் பி.கே. சின்ஹா தலைமையில் உயர் நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்தது. இக்குழு 7-வது ஊதியக்குழு பரிந்துரையை செயல்படுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. மொத்தம் 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும் 52 லட்சம் ஓய்வூதியர்களுக்கும் எவ்வளவு தொகை அளிக்க வேண்டும் என்பதை இக்குழு கணக்கிட்டு அளிக்கும்.
அதேபோல ராணுவத்தில் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டமும் அமல்படுத்தப் பட உள்ளது. இத்திட்டத்தை அமல்படுத்த தேவைப்படும் நிதி முழுவதையும் மத்திய நிதி அமைச்சகம் ஒதுக்கியுள்ளது.
7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்துவதால் அரசுக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்படும். எனவே வரும் நிதி ஆண்டில் பட்ஜெட் பற்றாக்குறையை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 3.9 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள் ளது. இருப்பினும் அந்த இலக்கை நிச்சயம் எட்ட முடியும் என்று தனது பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.