இந்தியா

மம்தா செயல்பாட்டால் காங்கிரஸ் அதிருப்தி:பாஜகவை எதிர்க்கும் கட்சிகளின் ஒற்றுமைக்கு சிக்கல்

ஆர்.ஷபிமுன்னா

காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் பல்வேறு அரசியல் பிரச்சினை கள் அலசப்பட்டன. காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து சென்று மம்தா பானர்ஜி தொடங்கிய திரிணமூல் காங்கிரஸின் வளர்ச்சி குறித்தும் அலசப்பட்டதாகத் தெரி கிறது.

இதில் மேற்கு வங்கத்திற்கு வெளியே பிற மாநிலங்களில் கால் பதிக்கும் திரிணமூல் காங்கிரஸின் நடவடிக்கை, காங் கிரஸை பாதிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக அக்கட்சி மீது காங்கிரஸ் கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில், அசாமின் மூத்த காங்கிரஸ் தலைவரான சுஷ்மிதா தேவ், கோவாவின் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் லுஜின்ஹோ பளிரோ ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் மம்தா கட்சியில் இணைந்தனர். லுஜின்ஹோவின் இழப்பால் அடுத்த ஆண்டு நடைபெறும் கோவா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு சிக்கல் உருவாகி விட்டது. இதனால் தம்மிடமிருந்து வெளியேறியத் தலைவர்களை விட அவர்கள் இணைந்த திரிணமூல் காங்கிரஸின் மம்தா மீது காங்கிரஸ் கடும் கோபம் கொண்டுள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் காங்கிரஸ் தேசிய நிர்வாகிகள் கூறும்போது, “கோவாவில் ஆம் ஆத்மி கட்சியும் வளரத் தொடங்கியுள்ளது. இதனால் அங்கு வரவிருக்கும் தேர்தலில் மம்தாவுடன் அர்விந்த் கெஜ்ரிவால் கைகோத்து எங்கள் வெற்றி வாய்ப்பை தட்டிப் பறிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இந்தக் கூட்டணி, பஞ்சாப், உத்தராகண்ட் மற்றும் உத்தரபிரதேசத்திலும் காங்கிரஸுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே பாஜகவை எதிர்க்கும் கட்சிகளுக்கு இடையே காங்கிரஸின் நிலைப்பாடு என்னவென்று தீர்மானிப்பதும் அவசியமாகிறது” என்றனர்.

40 இடங்களை கொண்ட கோவா சட்டப்பேரவைக்கு கடந்த 2017 பிப்ரவரியில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸுக்கு 30 சதவீத வாக்குகளுடன் 17 தொகுதிகள் கிடைத்தன. ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை என்றாலும் முதல் தேர்தலிலேயே அக்கட்சி 6.5 சதவீத வாக்குகள் பெற்றது. எனவே அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் கோவா தேர்தலில் காங்கிரஸுக்கு ஆம் ஆத்மி கட்சிக்கு சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பாஜகவுக்கு எதிரான கட்சிகளில் காங்கிரஸுடன் மம்தாவின் கட்சியும் முக்கியமான தாக கருதப்படுகிறது. மம்தா, எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட் பாளராகவும் சில கட்சிகளால் பேசப்படுகிறார். இந்தச் சூழலில் மம்தா மீது காங்கிரஸ் காட்டும் அதிருப்தி எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு சிக்கலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 2024 மக்களவைத் தேர்த லிலும் பாஜகவுக்கு ஆதரவான சூழல் ஏற்படும் வாய்ப்புகள் தெரிகின்றன.

SCROLL FOR NEXT