மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி – ஹரியாணா எல்லையான சிங்குவில் கடந்த 10 மாதங்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் விவசாயிகளின் போராட்டக் களத்துக்கு அருகில் சாலைத் தடுப்பு ஒன்றில் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று முன்தினம் கட்டித் தொங்கவிடப்பட்டு இருந்தது.
இரு கைகளும் கால்களும் தடுப்புக் கம்பியில் கட்டப்பட்டு ஒரு கை மணிக்கட்டு துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் இருந்தது. மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதே இளைஞர் வெட்டுக் காயங்களுடன் தரையில் ரத்த வெள்ளத்தில் கிடப்பது, சீக்கியர்களில் ஒரு பிரிவான நிஹாங்க் என்பவர்கள் அவரைச் சுற்றி நிற்கும் வீடியே்ா சமூக வலைதளங்களில் பரவியது. சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்தத்தை அந்த இளைஞர் கிழித்து எறிந்ததாகவும் அதற்காக அவரை நிஹாங்குகள் வெட்டிக் கொன்றதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த இளைஞர் பஞ்சாபின் தரன் தரன் மாவட்டம், கலாஸ் கிராமத்தில் வசித்த, தலித் சமூகத்தை சேர்ந்த லக்பீர் சிங் (35) என்பது தெரியவந்தது.
லக்பீர் சிங்கின் மனைவி ஜஸ்பிரீத் கவுர். இவர்களுக்கு தன்யா (12), சோனியா (10), குல்தீப் (8) என்ற 3 பெண் குழந்தைகள் உள்ளனர். ஜஸ்பிரீத் கடந்த 5 ஆண்டுகளாக தனது கணவரை விட்டுப் பிரிந்து தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசிக்கிறார். இதனால் லக்பீர் சிங் தனது அத்தை மற்றும் கணவனை இழந்த சகோதரியுடன் வசித்து வந்தார்.
டிட்டு என்றும் அழைக்கப்படும் லக்பீர் சிங், விவசாயத் தொழிலாளி ஆவார். அவர் போதைப் பொருளுக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது உறவினர் பல்கார் சிங் கூறும்போது, “டிட்டு தந்தை தர்ஷன் சிங் 6 ஆண்டுகளுக்கு முன் இறந்த பிறகு டிட்டு போதைப் பொருளுக்கு அடிமையாகிவிட்டார். போதைப் பொருளுக்காக திருடவும் தொடங்கிவிட்டார். எப்போதும் போதையில் இருக்கும் அவர் எப்படி சிங்கு சென்றார் எனத் தெரியவில்லை. யாராவது பணம் அல்லது போதைப் பொருள் கொடுப்பதாகக் கூறி அவரை சிங்கு அழைத்துச் சென்றிருக்க வேண்டும்” என்றார்.
என்றாலும் டிட்டு மீது குற்ற வழக்குகள் எதுவும் இல்லை என்றும் அவர் போதைப் பொருளுக்கு அடிமையானவரா என்பது தங்களுக்குத் தெரியாது என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் டிட்டுவின் குடும்பத்துக்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
15 தலித் அமைப்புகள் புகார் மனு
லக்பீர் சிங் கொலைக்கு அனைத்து கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அகில பாரதிய கதிக் சமாஜ், அகில பாரதிய பெர்வா விகாஸ் சங் உள்ளிட்ட 15 தலித் அமைப்புகள் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் விஜய் சாம்ப்லாவிடம் நேற்று மனு அளித்தனர்.
இந்தக் கொடூர சம்பவத்தை நியாயமாக விசாரிக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என அவர்கள் மனுவில் வலியுறுத்தியுள்ளனர். தாழ்த்தப்பட்டோர் ஆணையத் தலைவர் விஜய் சாம்ப்லா நேற்று முன்தினம், இந்தக் கொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் சம்பவம் குறித்து அறிக்கை அளிக்கவும் ஹரியாணா காவல்துறைக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.-பிடிஐ