திருவனந்தபுரத்தில் பகல் நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்து வருவதால், காலை 10 மணிக்கே முகப்பு விளக்கை எரியவிட்டுச் சென்ற வாகன ஓட்டிகள் | படம்: ஏஎன்ஐ. 
இந்தியா

கேரளாவில் கன மழை; 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: தமிழகத்திலும் மழை நீடிக்கும்

ஏஎன்ஐ

தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளதை அடுத்து, கேரளாவின் கடற்பகுதியில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பில், ''கேரளக் கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தம் நிலவுகிறது. இதன் காரணமாக, கேரளாவில் கனமழை முதல் மிக கனமழை வரை ஓரிரு இடங்களில் வரும் 17-ம் தேதிவரை பெய்யக்கூடும். சில இடங்களில் 18-ம்தேதி வரையும் பெய்யக்கூடும். 19-ம் தேதி முதல் மழை படிப்படியாகக் குறையும்.

இதனால் பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

கேரள முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், “அடுத்த 24 மணி நேரத்துக்கு எந்தவிதமான நீர் நிலைகளுக்கும் யாரும் செல்லக்கூடாது. அடுத்த 24 மணி நேரம் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆறுகள், நீர்நிலைகளில் நீரோட்டம், நீரமட்டம் உயரக்கூடும். சில அணைகளில் கொள்ளளவு அதிகரித்து நீர் திறக்கப்படலாம். ஆதலால் ஆறுகளில் கரை ஓரங்களில் வசிக்கும் மக்கள், அணைக்குத் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், அதிகாரிகள் அறிவுரையைப் பின்பற்றி நடக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வெதர்மேன்

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதில், “கேரளாவில் அரபிக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம் காரணமாக தமிழகத்திலும் மழையின் தாக்கம் இருக்கும். குறிப்பாக திருப்பூர், கோவை, நெல்லை, கன்னியாகுமரி, தேனி, நீலகிரி உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நாளை வரை (17-ம் தேதி) மழை நீடிக்கும்.

குறிப்பாக வால்பாறை, நீலகிரி (தேவால, பந்தலூர்), கன்னியாகுமரி, நெல்லையில் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகள், தேனி மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகள், தென்காசி மலைப் பகுதிகளில் நாளை மழையின் தாக்கம் அதிகரிக்கும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT