விவசாயிகள் போராட்டம் நடத்தும் பகுதியில் கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லி எல்லையான சிங்கு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து ஹரியாணா, பஞ்சாப், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி யின் எல்லைப் பகுதியில் சுமார் ஓராண்டாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதில் டெல்லியின் எல்லைப் பகுதியான சிங்குவும் ஒன்று. இந்நிலையில் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் பகுதிக்கு அருகே போலீஸார் வைத்திருக்கும் இரும்புத் தடுப்புகளில் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டது. இந்த இளைஞரின் கைகள் மணிக்கட்டு வரை வெட்டப்பட்ட நிலையில் இரும்புத் தடுப்புகளில் கட்டப்பட்டு இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து டெல்லி-ஹரியாணா எல்லைப் பகுதியில் முகாமிட்டுள்ள போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த இளைஞருக்கு 30 முதல் 35 வயது இருக்கலாம் என்று தெரிகிறது.
இதுகுறித்து சோனேபட் போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “இந்த இளைஞரை சீக்கியர்களில் ஒரு பிரிவினரான நிஹாங்ஸ் பிரிவினர் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக் கிறோம்.
நிஹாங்ஸ் பிரிவைச் சேர்ந்த சிலர், கொல்லப்பட்ட நபரை சுற்றி நின்றுகொண்டிருப்பதைக் காட்டும் ஒரு வீடியோ வெளிவந்துள்ளது. அவரது கை வெட்டப்பட்டிருப்பதையும், அவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதையும் இதில் காண முடிகிறது. அந்த நபரின் கண்களில் அதிர்ச்சியும் வலியும் தெரிகிறது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த சாஹிப்பை இழிவுபடுத்தும்விதமாக அந்த இளைஞர் கிழித்து எறிந்ததால் நிஹாங்ஸ் பிரிவினர் அவரைக் கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்" என்றார்.
இதனிடையே பஞ்சாப் மாநிலம், டார்ன் தரன் மாவட்டத்தில் உள்ள சீமா காலன் கிராமத்தைச் சேர்ந்த 35 வயது லக்பீர் சிங் என்பவர்தான் கொல்லப்பட்டவர் என்று அடை யாளம் காணப்பட்டுள்ளது. அந்தகிராமத்தின் தலைவர் அவன்குமார் மற்றும் உள்ளூர் போலீஸ் டிஎஸ்பி சுச்சா சிங் ஆகியோர் கொல்லப்பட்டவரின் அடையாளத்தை உறுதி செய் துள்ளனர்.
- பிடிஐ