வரும் 21-ம் தேதி மேலும் 86 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுதலை செய்யவுள்ளது என குஜராத் மாநில அரசு தெரிவித்துள்ளது.
சர்வதேச கடல் எல்லை விதிமுறைகளை மீறி மீன்பிடித்த குற்றத்துக்காக, 86 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடல் பாதுகாப்பு முகமை கைது செய்தது. இவர்கள் கராச்சியில் கடந்த ஓராண்டாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை தற்போது விடுதலை செய்யவிருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த 7-ம் தேதி 87 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுவித்தது.
இதனை, குஜராத் வெராவல் மீன்வளத் துறை கூடுதல் கண்காணிப் பாளர் விமல் பாண்டியா உறுதி செய்துள்ளார். இம்மீனவர்கள் வரும் 21-ம் தேதி விடுவிக்கப்படவுள்ளனர்.
வாகா எல்லைக்குள் வரும் 22-ம் தேதி இவர்கள் வருவார்கள். அதன்பிறகு ஓரிரு நாட்களில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
இதனிடையே, தேசிய மீனவர் கூட்டமைப்பு செயலர் மணீஷ் லோதாரி கூறும்போது, “18 மீனவர்கள் சிறைக்காலம் 3 ஆண்டுகளைக் கடந்தும் பாகிஸ்தான் சிறையில் இருப்பதாகவும், மீட்க நடவடிக்கை எடுக்கும்படியும் கடிதம் எழுதியுள்ளனர்.
அவர்கள் இந்தியா திரும்ப தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
இதுதவிர சுமார் 400 மீனவர்கள் பாகிஸ்தான் சிறையில் உள்ளனர்” எனத் தெரிவித்தார்.