தென்னிந்தியாவில் கோயில்கள் எல்லாம் மாநில அரசுகளை நிர்வகிக்கின்றன. அந்த நிலை மாறி இந்து கோயில் நிர்வாகத்தை இந்துக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்தியுள்ளார்.
நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைமையகத்தில் விஜயதசமி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. அதன்பின் நடந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:
''இந்து கோயில்களை இந்துக்கள் மட்டுமே பராமரிக்க வேண்டும், நிர்வாகம் செய்ய வேண்டும். இந்தக் கோயில்களில் இருந்து கிடைக்கும் வருமானம் அனைத்தும் இந்து சமுதாயத்தின் நலன்களுக்காகத்தான் பயன்படுத்தப்பட வேண்டும்.
ஆனால், இந்து கோயில்களின் நிலை இன்று கவலைக்குரியதாக இருக்கிறது. தென் மாநிலங்களில் கோயில்கள் நிர்வாகம் அனைத்தும் மாநில அரசுகள் கையில்தான் இருக்கிறது. நாட்டில் பிற மாநிலங்களிலும் கோயில் நிர்வாகத்தை அரசு வைத்திருந்தாலும், சில குடும்பத்தினரின் அறக்கட்டளையும், சொசைட்டி பதிவுச் சட்டத்தின் கீழ் சில அறக்கட்டளைகள் மூலம் அரசே நடத்துகிறது. சில கோயில்களை நிர்வகிக்க எந்த முறையும் இல்லாமல் இருக்கிறது.
கோயிலின் அசையும் சொத்துகளையும், அசையா சொத்துகளையும் முறையற்ற வகையில் பயன்படுத்துவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குறிப்பிட்ட வழிகாட்டுதல் முறைகள் மற்றும் வழிகாட்டு நூல்கள் ஒவ்வொரு கோயிலுக்கும் மற்றும் அதில் உள்ள மூலவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. அந்த வழிபாட்டு முறைகளிலும், சம்பிரதாயங்கள் முறையிலும் குறுக்கீடு மற்றும் தலையிடும் நிகழ்வுகளும் பதிவாகியுள்ளன.
சாதி மற்றும் மத வேறுபாடின்றி அனைத்து பக்தர்களுக்கும் கோயிலில் கடவுளை தரிசிக்கவும், வழிபடவும் வாய்ப்புகளை வழங்கிட வேண்டும். அனைத்து பக்தர்கள் மீதும் சாதி, மதப் பாகுபாடுற்ற அணுகல் எங்கும் கடைப்பிடிக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இந்த சிந்தனையுடன், நம்முடைய கலாச்சார வாழ்க்கையின் மையமானது கோயில் என்பதை மீண்டும் உருவாக்க வேண்டும். இந்து சமூகத்தின் வலிமையின் அடிப்படையில் கோயில்களை முறையாக நிர்வாகம் செய்தலையும், நடத்துதலையும் உறுதி செய்ய வேண்டும்''.
இவ்வாறு மோகன் பாகவத் தெரிவித்தார்