போதைப் பொருள் வழக்கில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் ஜாமீன் மனு மீதான விசாரணை அக்.20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 2-ம் தேதி, மும்பையில் இருந்து கோவாவுக்கு கார்டிலியா நிறுவனத்தின் சொகுசுக் கப்பல் ஒன்று சுற்றுலா புறப்பட்டது. இதில் என்சிபி அதிகாரிகளும் சாதாரண உடையில் பயணம் செய்தனர்.
கப்பலில் நடந்த கேளிக்கைவிருந்தின்போது, போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் (23) உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இரண்டாம் கட்டமாக இந்த வழக்கில் மேலும் சிலரையும் கைது செய்தனர். இதுவரை இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரையும் அக்டோபர் 21 ஆம் தேதி நீதிமன்றக் காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று (அக்.14) விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆர்யன் கான் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இது பொய்யான வழக்கு. ஆர்யன் கானை ஜாமீனில் விடுவிப்பது விசாரணையை எந்த விதத்திலும் பாதிக்காது. கைது செய்யப்பட்ட போது ஆர்யன் கானிடம் போதைப்பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று வாதிட்டார்.
ஆனால் என்சிபி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆர்யன் கான் நீண்ட காலமாகவே போதைப் பொருளை பயன்படுத்தி வந்துள்ளார். அவருக்கு போதை மருந்து உட்கொள்ளும் பழக்கம் இருக்கிறது. அவரது வாட்ஸ் அப் உரையாடல்கள் சந்தேகத்துக்கு இடமான வகையில் உள்ளன. அவரை ஜாமீனில் விடுவித்தால் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சாட்சிகளைக் கலைப்பார். காந்தி தேசத்தின் ஆர்யன் கான் போன்ற இளைஞர்கள் போதை மருந்து உட்கொண்டு சீரழிவது வேதனையான விஷயம் என்று வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜாமீன் மனு மீதான உத்தரவை வரும் அக். 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இன்று (அக். 15) தொடங்கி அக். 19 வரை அடுத்த நான்கு நாட்கள் துர்கா பூஜை மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை தினங்களாகும். இதனால் வழக்கு விசாரணையை அக். 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஆர்யன் கானுக்கு மேற்கொள்ளப்பட்ட கோவிட் பரிசோதனை முடிவு நெகட்டிவ் என வந்ததையடுத்து அவர் மும்பை ஆர்தர் சாலை சிறையின் குவாரன்டைன் பகுதியில் சிறைச்சாலை அறைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு விசாரணைக் கைதி N956 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது.