பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவது குறித்து கண்டித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, “ தவறான நிர்வாகத்தை மக்கள் முடிவுக்கு கொண்டு வருவார்கள்” என மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த நிறுத்தப்பட்டிருந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வு நேற்று மீண்டும் உயர்த்தப்பட்டது. டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு 35 பைசா அதிகரித்து ரூ.104.79ஆகவும், டீசல் லிட்டர் 93.52 ஆகவும் அதிகரித்துள்ளது.
மும்பையில் பெட்ரோல் விலை 34 பைசா அதிகரித்து ரூ110.75 ஆகவும், டீசல் 37 பைசா அதிகரி்த்து ரூ.101.40 ஆகவும் உயர்ந்துள்ளது. இதேபோல போபால், கொல்கத்தா, சென்னை ஆகிய நகங்களிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்துவிட்டது, டீசல் விலை 93ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து 7நாட்கள் விலையை உயர்த்தி 12, 13ம் தேதி மட்டும் விலையை உயர்த்தாமல் இருந்து நேற்று மீ்ண்டும் உயர்த்திவிட்டனர்.
தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “பேராசை பிடித்த தவறான நிர்வாகம் மக்களிடம் இருந்து வரியை முறையற்ற ரீதியில் வசூலித்தது என பழங்கால கிராமப்புறக் கதைகளில் சொல்வதுண்டு. இதனால் மக்கள் மனவருத்தம் அடைந்து, முடிவில் அந்த தவறான நிர்வாகத்தை அளித்த ஆட்சியை மக்களே முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். நிதர்சனத்தில் அவ்வாறுதான் இங்கு நடக்கப்போகிறது” எனத் தெரிவித்துள்ளார்.