இந்தியா

இராக்கில் சிக்கிய இந்தியர்களை மீட்க அரசு தீவிரம்: சுஷ்மா

செய்திப்பிரிவு

இராக்கில் கடத்தப்பட்ட இந்தியர்களை பத்திரமாக மீட்டுக் கொண்டு வர தேவையான நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.

இராக்கில் உள்நாட்டுச் சண்டை நடந்து வருகிறது, அந்நாட்டின் வடக்கு பகுதியை நோக்கி தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் சில நகரங்களை கைப்பற்றி வருகின்றனர். மோசுல் நகரில் பணிபுரிந்து வந்த இந்தியாவைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் 40 பேரை தீவிரவாதிகள் கடத்தினர். அவர்களை மீட்டு இந்தியாவுக்கு கொண்டுவரும் முயற்சிகளை வெளியுறவுதுறை மேற்கொண்டுள்ளது.

இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இன்று கூறுகையில், "இராக்கில் கடத்தப்பட்டுள்ள இந்தியர்களை மீட்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக உள்ள அனைத்து விதமான முயற்சிகளையும் அரசு செய்து வருகிறது. சாத்தியமானதாக கருதப்படும் அனைத்து உத்திகளையும் உபயோகித்து இந்தியர்களை மீட்க வேண்டும் என்ற நிலையில்தான் அரசு உள்ளது.

இராக்கில் உள்ள மனித உரிமைகள் ஆணையங்களுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம். இந்த ஆணையங்களும் இராக் அரசும் கடத்தப்பட்டவர்கள் குறித்த தகவல்களை பெற முயன்று வருகிறது. இது குறித்து மேற்கொள்ளப்படும் அனைத்து விவகாரங்களையும் நான் நேரடியாகவே கண்காணித்து வருகிறேன்" என்றார் சுஷ்மா ஸ்வராஜ்.

போர் பதற்றம் நீடித்துவரும் இராக்கில் மொத்தம் 10,000 இந்தியர்கள் சிக்கியுள்ளனர். இதில் சுமார் 100 பேர் பதற்றமான மற்றும் பாதிக்காப்பற்ற சூழலில் தற்போது உள்ளனர்.

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திவரும் திக்ரித் பகுதியில் இந்திய நர்ஸுகள் 46 பேர் சிக்கியுள்ளனர். இவர்களை பாதுகாப்பான சூழலுக்கு மீட்டுக் கொண்டுவர, இராக்கில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளையும், அங்கு மீட்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுவரும் சர்வதேச செஞ்சிலுவை செம்பிறையிடமும் வெளியுறவுத் துறை கேட்டுக்கொண்டது. இதன் அடிப்படையில் இவர்கள் நர்ஸ்களிடம் தொடர்பில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இராக் தலைநகர் பாக்தாதுக்கு, இந்திய வெளியுறவுத்துறையின் சார்பில் அங்கிருக்கும் இந்திய ராணுவத்தை வலுப்படுத்த முன்னாள் தூதர் ஒருவரை மத்திய அரசு அனுப்பியுள்ளது.

இந்த நிலையில், இராக்கில் சிக்கியுள்ள பஞ்சாபிகளை மீட்க நடவடிக்கை எடுக்கும்படியும், அதற்கான செலவுகளை முழுவதுமாக ஏற்றுக் கொள்ள அந்த அரசு தயாராக இருப்பதாகவும் அம்மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT