இந்தியா

கிரிமினல் வழக்குகளுடனான வேட்பாளர்களைக் களமிறக்க புதிய கெடுபிடிகள்: 5 மாநிலத் தேர்தலில் அமலாகிறது

ஆர்.ஷபிமுன்னா

ஐந்து மாநில தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று கானொலிக் காட்சி மூலம் நடைபெற்றது. இதில் கிரிமினல் வழக்குகளுடனான வேட்பாளர்கள் மீதான விதிமுறைகளைத் தீவிரப்படுத்த மத்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

அடுத்த வருடம் துவக்கத்தில் உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதன் மாநில தேர்தல் ஆணையர்களுடன் மத்திய தேர்தல் ஆணையம் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தியது.

இதில், கிரிமினல் வழக்குகளுடனான வேட்பாளர்கள் போட்டியிட புதிய விதிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளது. இதனால், அவர்களை போட்டியிட வைக்கும் அரசியல் கட்சிகளுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதன்படி, கிரிமினல் வழக்குகளுடனான வேட்பாளர்கள் அறிவித்த 48 மணி நேரத்தில் அவர்களைப் பற்றிய விவரம் வெளியிடப்பட வேண்டும். இதை பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக வெளியிட வேண்டும்.

இதில், அந்த வேட்பாளர் மீது உள்ள வழக்குகள் எத்தனை? அதன் விவரம் என்ன? ஆகியவை இடம் பெற வேண்டும். நீதிமன்றங்களில் இவ்வழக்குகளின் நிலை குறித்தும் தெளிவுபடுத்த வேண்டும்.

இதுபோன்ற கிரிமினல் வழக்குகள் கொண்டவரை வேட்பாளராக்க காரணம் என்ன? எனவும், அவை எதுவும் இல்லாதவரை போட்டியிட வைக்காதது ஏன்? என்றும் அவ்விளம்பரத்தில் விளக்கம் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விளம்பரங்கள் வேட்பாளர் அறிவித்த நான்கு நாட்களில் வெளியாக வேண்டும். பிறகு வாக்கு தேதிக்கு நான்கு நாட்களுக்கு முன் மீண்டும் வெளியிடப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டது.

கடந்த செப்டம்பர் 25, 2018 இல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், கிரிமினல் வேட்பாளர்களுக்கான இந்த விதிமுறைகள் வெளியாகி இருந்தது.

ஐந்த மாநில ஆணையர்களின் ஆலோசனைக் கூட்டம், மத்திய தேர்தல் ஆணையரான அஜய் குமார் சுக்லா தலைமையில் நடைபெற்றது.

வரும் நவம்பர் முதல் இந்த ஐந்து மாநிலங்களின் வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற உள்ளது. இதில், இடம்மாறிய மற்றும் இறந்தவர்களின் பெயர்கள் பட்டியலிருந்து நீக்கப்படவும் உள்ளது.

இத்துடன் வருடம் ஜனவரி 1, 2022 முதல் 18 வயது நிறைவடைபவர்களின் பெயர்கள் புதிய வாக்காளர்களாகப் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளது. இப்பட்டியல் தேர்தல் அறிவிப்பிறகு முன்பாக வெளியிடப்படும்.

SCROLL FOR NEXT