இந்தியா

உ.பி. லக்கிம்பூர் கலவர வழக்கில் கைதான ஆசிஷ் மிஸ்ராவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்: 12 மணி நேரத்துக்கும் மேலாக போலீஸார் விசாரணை

செய்திப்பிரிவு

உத்தர பிரதேசம் லக்கிம்பூரில் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மத்திய இணை அமைச்சர் அஐய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவை 14 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த வாரம் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கார் மோதிய சம்பவம் மற்றும் அதையடுத்து ஏற்பட்ட கலவரத்தில் 4 விவசாயிகள் 2 பாஜகவினர் உட்பட 8 பேர் இறந்தனர். விவசாயிகள் மீதுமோதிய காரில் மத்திய உள்துறைஇணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இருந்ததாகவும் அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் விவசாயிகளும் எதிர்க்கட்சியினரும் வலியுறுத்தினர். சம்பவம் நடந்தபோது காரில் தனது மகன் ஆசிஷ் மிஸ்ரா இல்லை என்று மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறினார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஆசிஷ் மிஸ்ரா மீது உத்தர பிரதேச போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பினர். 2-வது முறை சம்மனுக்குப் பின் கடந்த சனிக்கிழமையன்று காலை 10.30 மணியளவில் போலீஸார் முன் ஆசிஷ் மிஸ்ரா விசாரணைக்கு ஆஜரானார். விவசாயிகள் மீது கார் மோதிய சம்பவம் மற்றும் கலவரம் தொடர்பாக 12 மணி நேரத்துக்கும் மேலாக அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் சனிக்கிழமை இரவு ஆசிஷ் மிஸ்ராவை கைது செய்தனர்.

கைதுக்கு பின் மருத்துவ பரிசோதனைகள் முடிந்து லக்கிம்பூர் நீதிமன்றத்தில் ஆசிஷ்மிஸ்ராவை போலீஸார் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணைக்கு ஆசிஷ் மிஸ்ரா ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் கேள்விகளுக்கு மழுப்பலாக பதிலளித்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT