காஷ்மீரில் 16 இடங்களில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்ட என்ஐஏ அதிகாரிகள், 700 பேரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
கடந்த 7-ம் தேதி காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகேயுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் சுபந்தர் கவுர், ஆசிரியர் தீபக் சந்த் ஆகியோரை தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்த வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது.
கடந்த ஜூன் 27-ம் தேதி ஜம்மு பகுதியில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி சாஜித் குல் 5 கிலோ வெடிமருந்துடன் பிடிபட்டார். இந்த வழக்கையும் என்ஐஏ விசாரித்து வருகிறது.
மேலும் கடந்த 2020 பிப்ரவரி முதல் 'வாய்ஸ் ஆப் ஹிந்த்' என்ற பெயரில் மாதந்தோறும் ஆன்லைனில் ஓர் இதழ் வெளியாகிறது. ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவு தீவிரவாதிகள் இந்த இதழை நடத்தி வருகின்றனர்.
இதன்மூலம் காஷ்மீரில் தீவிரவாதம் தூண்டப்பட்டு வருகிறது. இதுதொடர்பாகவும் என்ஐஏ விசாரித்து வருகிறது.
இவை தொடர்பாக காஷ்மீரின் நகர், அனந்தநாக், குல்காம், பாரமுல்லா உள்ளிட்ட 16 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இந்தசோதனையின்போது ஏராளமான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ஏராளமான செல்போன்களை என்ஐஏ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
ஸ்ரீநகர் தலைமையாசிரியர், ஆசிரியர் கொலை தொடர்பாக சுமார் 40-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விசாரணைக்கு ஆஜராகுமாறு என்ஐஏ சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. இதன்படி ஸ்ரீநகரில் நேற்று அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
சோதனை, விசாரணை குறித்துஎன்ஐஏ வட்டாரங்கள் கூறியதாவது:
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு இந்துக்கள், சீக்கியர்களை குறிவைத்து அதிக அளவில் தாக்குதல் நடத்தப்படுகிறது.
அண்மைக் காலமாகஇந்த தாக்குதல் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 700 பேரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளோம். இப்போது 16 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியுள்ளோம். 40-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை விசாரித்துள்ளோம்.
என்ஐஏ நடத்திய சோதனையில் ஐ.எஸ்.ஐ.எஸ்., லஷ்கர் இ தொய்பாதொடர்பான முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்த அமைப்புகளை சேர்ந்த தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் இருந்து ஆளில்லா சிறிய விமானங்கள் மூலம் ஆயுதங்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இதுதொடர்பாகவும் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்தன.