கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கண்டலா பகுதியைச் சேர்ந்தவர் அல் அமீன். பள்ளியில் ஒரு முறை ஆசிரியை வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த போது, அல் அமீன் பாடத்தை கவனிக்காமல் இருந்ததாக கூறி பேனாவை அவர் மீது தூக்கி எறிந்தார். அந்த பேனா கண்ணில் பட்டதால் அல் அமீனுக்கு ஒருகண்ணில் பார்வை பறிபோனது. இதனால் தற்போது தனது வாழ்வையே இழந்து நிற்கும் அவர், அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
இதுகுறித்து அல் அமீன்(25) இந்து தமிழ் நாளிதழிடம் கூறுகையில், ‘‘கடந்த 2005-ம் ஆண்டு கண்டலா அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது பின்னால் இருந்த நண்பன் ஒருவன் விளையாட்டிற்காக என் முதுகில் குத்தினான். நான் ஏன் குத்தினாய் எனக் கேட்டுத் திரும்பினேன். அப்போது வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஷெரீபா ஷாஜகான் என்னும் ஆசிரியை, நான் வகுப்பைக் கவனிக்காததாக நினைத்து பேனாவை என் மேல் வீசினார். இதில் பேனா முனை என் கண்ணில் பாய்ந்தது. என் அழுகை சத்தம் கேட்டு பக்கத்து வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர் ஓடிவந்தார். ஆனால் அவரும் ஒன்றும் செய்யவில்லை. இந்த செயலால் எனது இடதுகண் பார்வை பறிபோனது. அறுவை சிகிச்சை செய்தபோதிலும், என் பார்வையை மீட்க முடியவில்லை.
இந்த சம்பவம் நடந்து 16 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும்கூட என் பாதிப்புக்கு உரிய இழப்பீடு கிடைக்கவில்லை. அரசு பள்ளி ஆசிரியையின் இந்த செயலைக் கண்டித்து அப்போது கேரளா முழுவதும் கடும் எதிரப்பு கிளம்பியது. ஆனால் எனக்கு உரிய நீதி மட்டும் கிடைக்கவில்லை.
கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி, திருவனந்தபுரத்தில் உள்ள கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் தானாக முன்வந்து ஆசிரியை குற்றவாளி எனத் தீர்ப்பு கூறியது. மேலும் ஆசிரியைக்கு ஓராண்டு சிறையும், 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது. ஆசிரியரிடமிருந்து இப்படியான செய்கையை சமூகம் எதிர்பார்க்காது என்றும் நீதிமன்றம் கண்டித்தது.
இந்தத் தீர்ப்பு இறைவன் நடத்தி கொடுத்தது. ஆனால் இது எனக்கு எப்படி உதவும்? என் ஒரு பக்கம் இன்னும் இருட்டாகவே இருக்கிறது. என் பாதிப்பிற்கு இழப்பீடோ, நிதியோ ஈடே கிடையாது.
என் அம்மா சுமையாவிடம் சின்ன காயம்தான் எனச் சொல்லி என்னை அவரோடு வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். இத்தனை சிரமங்களுக்கு மத்தியில் படித்து பள்ளிப்படிப்பை முடித்தேன். தொடர்ந்து ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் ஜவுளி தொழில்நுட்பப் பிரிவில் சேர்ந்தேன். ஆனால் என்னால் அந்தப் படிப்பை முடிக்க முடியவில்லை. சின்ன வயதில் காவல் துறையில் வேலை செய்ய வேண்டும் என கனவு கண்டேன். அதையும் என் ஆசிரியை தகர்த்துவிட்டார்.
வீட்டை நான் கவனித்துக் கொள்வேன் என குடும்பத்தினர் நினைத்தார்கள். ஆனால் இப்போது அவர்கள்தான் என்னைக் கவனித்துக் கொள்கிறார்கள். அரசு என் தகுதிக்கு ஏற்ற வேலை வழங்குவது மட்டும் தான் நியாயமான இழப் பீடாக இருக்க முடியும். இவ்வாறு அல்அமீன் கூறினார்.