பிரஸல்ஸ் நகரில் நடக்கும் இந்திய-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) காலை பெல்ஜியம் சென்றடைந்தார்.
பிரஸல்ஸில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதாக வெளியுறவு செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸில் 13-வது இந்திய-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு புதன்கிழமை நடைபெறுகிறது. இதில் மோடி பங்கேற்கிறார்.
இம்மாநாட்டில் இருதரப்புக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது. பெல்ஜியம் நாட்டு பிரதமர் சார்லஸ் மைக்கேலுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
மார்ச் 22-ல் பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸில் நடந்த தீவிரவாத தாக்குதலில் இந்தியர் ஒருவர் உட்பட 31 பேர் கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் மோடி அஞ்சலி செலுத்துகிறார்.
பிரஸல்ஸ் மாநாட்டை முடித்துக் கொண்டு வாஷிங்டன்னில் நாளை (மார்ச் 31) மற்றும் நாளை மறுநாள் (ஏப்ரல் 1) தேதிகளில் நடக்கவுள்ள உலக அணுசக்தி பாதுகாப்பு உச்சி மாநாட்டிற்கு பிரதமர் மோடி செல்கிறார்.