கணவனை, ‘குண்டு யானை’ என்று சொல்லி மனைவி இழிவுபடுத்தி யுள்ளார். எனவே, அவர்களுக்கு விவாகரத்து அளித்தது செல்லும் என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2012-ம் ஆண்டு குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து அளித்த தீர்ப்பை எதிர்த்து மனைவி தரப் பில் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மனைவியால் அடக்குமுறைக்கு ஆளானதாகவும், தன்னால் தாம்பத்ய உறவில் திருப்தியளிக்க முடியவில்லை என மனைவி குற்றம்சாட்டுவதாகவும் கணவன் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டி ருந்தது. இதில், கணவன் தரப்பு வாதத்தை ஏற்று விவாகரத்து அளிக்கப்பட்டது.
குடும்பநல நீதிமன்றம் தெளி வற்ற வகையிலும், குறிப்பிடத்தக்க குற்றச்சாட்டுகள் இல்லாமலும் விவாகரத்து அளித்துள்ளதாக மேல்முறையீட்டு மனுவில் மனைவி குறிப்பிட்டிருந்தார்.
இவ்வழக்கு நீதிபதி விபின் தாங்கி முன்னிலையில் விசார ணைக்கு வந்தது. அப்போது அவர் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தார்.
“யானை, குண்டு யானை போன்ற வார்த்தைகளால் மனைவி தன் குண்டான கணவனை மரி யாதை இல்லாமல் அழைத்துள் ளார். இதனால், அவரின் சுயமரி யாதை, மதிப்பு ஆகியவை பாதிக் கப்பட்டுள்ளன. மனைவி தன் கணவனை அறைந்ததுடன், வீட்டை விட்டு வெளியேறும்படி கூறியுள் ளார்” இதுபோன்ற வார்த்தைகள் திருமண உறவை உடைக்க வல்லவை என கூறி நீதிமன்றம் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது.
“மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டு, கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணைக் கொடுமை புகார் அளிக்கப்போவதாக மனைவி மிரட்டியுள்ளார். மேலும், கணவரின் சொத்துகளை தன் பெயரில் மாற்றிக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் 2005-ம் ஆண்டு, தாம்பத்ய உறவு வைத்துக் கொள்ள விரும்பி மனைவியை அணுகியபோது, அவர் அடித்து துன்புறுத்தி, காயப்படுத்தியதாக வும்” கணவன் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.