வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் போராடி உயிரிழந்த 750 விவசாயிகளுக்கு நாடாளுமனறத்தில் ஒருமுறையாவது பிரதமர்மோடி இரங்கல் தெரிவித்திருக்க வேண்டும் என்று பாரதிய கிசான் மோர்ச்சா தலைவர் ராகேஷ் திக்கைத் தெரிவித்தார்.
இந்தியா டுடே சார்பில் நடந்த கருத்தரங்கில் நேற்று என்று பாரதிய கிசான் மோர்ச்சா தலைவர் ராகேஷ் திக்கைத் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
விவசாயிகள் தங்கள் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கப் போராடி வருகிறார்கள். ஆனால், குறைந்தபட்ச ஆதரவு விலை இருப்பதாக மத்திய அரசு கோருகிறது, மத்திய அரசின் வார்த்தைகள் அனைத்தும் காகித அளவில்தான் இருக்கிறது. நடைமுறைக்கு வரவில்லை.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஓர் ஆண்டாக விவசாயிகள் போராடி வருகிறார்கள், 750 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த விவசாயிகளுக்காக ஒருமுறையாவது பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவித்திருக்க வேண்டும்.
லக்கிம்பூர் கெரி கலவரத்தில் மத்திய அமைச்சர் அஜெய் மிஸ்ராவின் மீது ஐபிசி 120பி பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர் பதவியிலிருந்து விலகி விசாரணையைச் சந்திப்பதுதான் சிறந்ததாக இருக்கும். ஆனால், மிஸ்ரா தொடர்ந்து அமைச்சர் பதவியில் நீடிக்கிறார், யாரும் அவரை கேள்வி கேட்க முடியவில்லை.
எந்த மண்டியிலும் சென்று விளை பொருட்களை விற்க வேளாண் சட்டத்தில் வசதி இருப்பதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், மத்தியப் பிரதசேத்தில் 182 மண்டிகள் நிதிச்சிக்கல் காரணமாக மூடப்பட்டுள்ளன.விவசாயிகள் அழிக்கப்படுகிறார்கள். குறைந்தபட்ச ஆதரவு விலை காகித அளவில்தான் இருக்கிறது,. கிராமங்களுக்குச் சென்று ஆளும் கட்சியினர் சென்று பார்ப்பதில்லை. டெல்லியில் அமர்ந்து கொண்டு சட்டத்தை இயற்றுகிறார்கள்.
பிஹாரில் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பே மண்டிகள் மூடப்பட்டுவிட்டன. ஆனால், பிஹாரில் விவசாயிகள் அனைவரும் பணக்காரர்களாக மாறிவிட்டார்கள் என்று மத்திய அரசு சொல்கிறது . குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு எந்தவிதமான சட்டப்பாதுகாப்பும் இல்லாதபோது எதற்காக ஆட்சியில் இருக்கிறார்கள்.
கடந்த 2011ம் ஆண்டு குஜராத் முதல்வராக மோடி இருந்த போது நிதிக்குழு உருவாக்கப்பட்டது அதில் தலைவராக மோடி இருந்தார். குறைந்த பட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய சட்டம் இயற்ற வேண்டும் என்று அப்போதைய காங்கிரஸ் அரசுக்கு பரி்ந்துரை செய்தது மோடிதான். ஆனால், தற்போது குறைந்தபட்ச ஆதரவு விலைக்குசட்டம் கொண்டுவர மோடியே மறுக்கிறார். நாட்டுக்கே மோடி துரோகம் செய்து வருகிறார்.
இவ்வாறு திக்கைத் தெரிவித்தார்