இந்தியக் கடலோரக் காவல் படையானது நம் நாட்டுக்கு மட்டுமின்றி அண்டை நாடுகளுக் கும் பாதுகாப்பாக விளங்குகிறது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இந்தியக் கடலோரக் காவல் படையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு பதக்கம் வழங்கி கவுரவிக்கும் நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
இந்தியக் கடலோரக் காவல் படை தொடங்கப்படும்போது அதில் 4 முதல் 6 படகுகள் மட்டுமே இருந்தன. ஆனால், இப்போது 150 கப்பல்கள், 66 விமானங்களுடன் மிகப்பெரிய படையாக இந்திய கடலோரக் காவல் படை விளங்குகிறது. இந்தப் படையில் உள்ள வீரர்களின் தன்னிகரற்ற உழைப்பும், தியாகமுமே இதற்கு காரணமாகும். கடலோரக் காவல் படையினரின் தீரத்தால் நம் நாட்டுக்கு வரவிருந்த பல ஆபத்துகள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டிருக்கின்றன. இதனை இந்திய மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.
போதைப்பொருள் தடுப்பு
இந்தியாவின் கடற்பகுதியில் குற்றங்களை தடுப்பதுடன் எதிரி நாடுகளின் ஊடுருவல்களையும் கடலோரக் காவல் படை வீரர்கள் தடுத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, கடல்வழியாக போதைப்பொருள் நுழைவதையும் இரும்புக் கரம் கொண்டு தடுத்து வருகிறார்கள். போதைப் பொருளால் ஒரு நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். அந்த வகையில், நாட்டின் பாதுகாப்பில் மட்டுமின்றி இந்தியப் பொருளாதார வளர்ச்சியிலும் கடலோரக் காவல் படை மகத்தான பங்களிப்பை வழங்கி வருகிறது.
அதுபோல, இரவு பகலாக அர்ப்பணிப்பு உணர்வுடன் கண் காணிப்புப் பணியில் ஈடுபடுவதால் இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் அண்டை நாடுகளுக்கும் பாதுகாப்பு அரணாக கடலோரக் காவல் படை விளங்குகிறது.
இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார். - பிடிஐ