தனியார் மயமாக்கல் பட்டியலில் உள்ள பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்கள் ஒரு காலத்தில் தனியாரால் உருவாக்கப் பட்டவைதான் என முதன்மை பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால் கூறியுள்ளார்.
பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதற்கு பதிலளிக்கும் வகையில் முதன்மை பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால் கூறியதாவது:
அரசின் தனியார்மயமாக்கல் நடவடிக்கையை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள், பொதுத்துறை நிறுவனங்கள் பல ஆண்டுகளின் கடும் முயற்சியில் பொது மக்களின் வரிப்பணத்தில் கட்டி எழுப்பப்பட்டவை என்று கூறுகிறார்கள்.ஆனால் அரசின் தனியார்மயமாக்கல் பட்டியலில் உள்ள பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்கள் தனியாரால் உருவாக்கப் பட்டவை ஆகும்.
சமீபத்திய உதாரணம் ஏர்இந்தியா. இது தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு பின்னர்பொதுத்துறை உடைமையாக்கப் பட்டது. இந்நிறுவனம் இப்போது டாடாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது வரவேற்கத் தக்கது. அதேபோல தனியார் வங்கிகள் 1969-ல் தேசிய மயமாக்கப்பட்டன.
மேலும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கெனவே தெரிவித்ததுபோல் மூலோபாய துறைகள் மற்றும் மூலோபாயம் அல்லாத துறைகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் மூலோபாய துறைகளில் அரசின் பங்களிப்பு எப்போதுமே இருக்கும் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அதேசமயம் தேவைப்படும் போது பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்க அரசு ஒருபோதும் தயங்கியது இல்லை. சமீபத்தில் மேம்பாட்டு நிதி நிறுவனத்தை அரசு நிறுவியது. மேலும் பெரிய உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான நிதி சேவைக்காக உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதிக்கான தேசிய வங்கியையும் அமைத்துள்ளது.
வங்கிகள் போன்ற முக்கிய மூலோபாய துறைகளில் பல்வேறுசவால்களுக்கு மத்தியிலும் அரசுதொடர்ந்து கணிசமான பங்களிப்பைத் தொடர்கிறது. காரணம் தனியார் வங்கிகளின் நிலையும் கொஞ்சம் மோசமாகத்தான் இருக்கிறது. நெருக்கடியான சூழலில்நிதித் துறையைத் தாங்கிப்பிடிப்பது அரசுகளின் பொறுப்பாகிறது. சமீபத்தில் யெஸ் வங்கியில் ஏற்பட்ட சிக்கல்களைத் தொடர்ந்து அதை சீரமைப்பு நடவடிக்கைக்குள் அரசு கொண்டுவந்தது என்றார் அவர்.