இந்தியா

தீவிரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து காஷ்மீரை விட்டு வெளியேறும் பண்டிட்கள்

செய்திப்பிரிவு

காஷ்மீரில் தீவிரவாதிகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி வருவதையடுத்து, காஷ்மீர் பண்டிட்கள் வெளியேறி வருகின்றனர்.

காஷ்மீரில் கடந்த சில நாட்களாக தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஸ்ரீநகர் அருகில் மருந்து கடை வைத்திருந்த 68 வயது முதியவர், டாக்ஸி ஓட்டுநர், தெருவோர வியாபாரி ஆகிய 3 பேரை கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன்பின், ஸ்ரீநகர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் ஆகிய இருவரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். அவர்களில் ஒருவர் காஷ்மீர் பண்டிட், மற்றொருவர் சீக்கியர்.

கடந்த நான்கு நாட்களில் அடுத்தடுத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதை தொடர்ந்து, காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் இருந்து பண்டிட் இனத்தைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட சிறுபான்மை பண்டிட் குடும்பங்கள் நேற்று வெளியேறின. பண்டிட்களின் பல குடும்பத்தினர் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறுவதற்கு தயாராகி வருகின்றனர்.

பண்டிட்கள் குடியிருப்பு

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஏற்கெனவே ஆயிரக்கணக்கான பண்டிட்கள் கடந்த 90-களில் வெளியேறினர். அவர்களை மீண்டும் காஷ்மீரில் குடியமர்த்தும் நடவடிக்கையாக பத்காம் மாவட்டத்தில் உள்ள ஷிகாபோரா பகுதியில் குடியிருப்பு அமைக்கப்பட்டது. அங்கிருந்து நேற்று மட்டும் 12 குடும்பங்கள் வெளியேறின.

ஷிரதா தேவி என்பவர் தனது மகன், மகளுடன் அங்கு வசித்து வந்தார். அவர் கூறும்போது, ‘‘கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் சிறப்பு திட்டத்தின் கீழ் எனது மகனுக்கு வேலை கிடைத்தது. ஆனால், தற்போது இங்கிருந்து வெளியேற சனிக்கிழமை அதிகாலை வாடகைக் காருக்கு முன்பதிவு செய்துள்ளோம்’’ என்றார்.

கடந்த சில நாட்களில் அடுத்தடுத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பின்னர், வெளியில் செல்வதற்கே பயமாக இருக்கிறது என்று மற்றொரு ஷிகாபோரா குடியிருப்பில் வசிக்கும் காஷ்மீர் பண்டிட் ஒருவர் கூறுகிறார். காஷ்மீர் பண்டிட்களின் குடியிருப்பில் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. அதனால் குடியிருப்புக்குள் பாதுகாப்பாக இருக்கிறோம். வெளியில் சென்றால் என்ன நடக்குமோ என்கின்றனர்.

காஷ்மீரை விட்டு வெளியேறியபண்டிட்கள் கடந்த 2015-ம் ஆண்டுக்கு பிறகு பலர் திரும்பி உள்ளனர். அவர்களுக்கு பிரதமர் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புகள், குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தங்கள் சொந்த இடத்தில் மீண்டும் வாழ்க்கையைத் தொடங்க நினைத்தோம். ஆனால் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துவிட்டது என்கின்றனர்.

SCROLL FOR NEXT