மாநிலங்களவை உறுப்பினரான இந்தி நடிகை ரேகா முதன்முறையாக பட்ஜெட் கூட்டத்தொடருக்கு இன்று வருகை புரிந்தார். இவர் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் நாடாளுமன்றம் வருவதில்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது.
இன்று காலை வழக்கம் போல் காலை 11.00 மணிக்கு துவங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது. இதற்கு சற்று முன்பாக இளம் மஞ்சள் நிற பகட்டான சேலை மற்றும் கூலிங்கிளாஸ் கண்ணாடி அணிந்து நாடாளுமன்றத்தில் திடீர் என நுழைந்தார் ரேகா. அப்போது, அவரை பார்த்தவர்களில் பெரும்பாலோனோர் ஆச்சரியம் அடைந்தனர். இதற்கு, பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது முதல் இன்று முதன்முறையாக நடிகை ரேகா வருகை புரிந்தது காரணம் ஆகும்.
மாநிலங்களவையில் முதலாவதாக துவங்கிய கேள்வி நேரத்தில் கலந்து கொண்டாலும் ரேகா, எந்த ஒரு கேள்வியும் கேட்கவில்லை. இங்கு அவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை எண் 99-ல் அமர்ந்து சற்று நேரம் மட்டும் கலந்து கொண்டவர், காங்கிரஸ் உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ரேணுகா சவுத்ரியுடன் வெளியேறினார்.
கடந்த முறை ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால்ல் கலைத்துறை பிரிவில் மாநிலங்களவைக்கு நியமன உறுப்பினராக அமர்த்தப்பட்டவர் நடிகை ரேகா. இவர் மீது, ஏப்ரல் 27, 2012-ல் பதவி ஏற்றது முதல் மாநலங்களைக்கு வருவது இல்லை என்றும், அதன் நடவடிக்கைகளில் கலந்து கொள்வது இல்லை எனவும் புகார்கள் எழுந்து வருகிறது.
கடைசியாக இவர் கடந்த முறை நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரிலும் ஒரே ஒருமுறை கலந்து கொண்டிருந்தார். இவருடன் சேர்த்து மற்றொரு நியமன உறுப்பினரான கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரும் ரேகாவை போல் அதிகமாக அவைக்க வருவது கிடையாது. இதனால் இருவரும் அவைக்கு வராதது குறித்து அமளியில் ஈடுபட்ட சில உறுப்பினர்கள் சச்சின் மற்றும் ரேகா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். இதற்கு, இருவரும் மாநிலங்களவை தலைவரிடம் ஏதாவது சிறப்பு அனுமதி பெற்றனரா எனவும் ஒருமுறை கேள்வி எழுப்பினர். ரேகாவை போல் அவைக்கு வருகை தராதவர்களுக்கு சாதகமாக அரசியலமைப்பு சட்டம் 104-ன் விதி சாதகமாக உள்ளதால், இருவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் இருப்பதாகக் கருதப்படுகிறது.
இவரது பதவிக் காலம் வரும் ஏப்ரல் 26, 2018 வரை உள்ளது. தமிழகத்தில் பிறந்த பாலிவுட் நடிகையான ரேகா தனது தொகுதி வளர்ச்சி மேம்பாட்டு நிதியில் இருந்து அதிகபட்ச தொகையான ரூபாய் ஒரு கோடியை வெள்ளநிவாரண நிதிக்கு ஒதுக்கியுள்ளார்.