உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன. இதில், லக்கிம்பூர் கேரி சம்பவத்திற்கு பிறகும் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பு அமைந்துள்ளது.
பாஜக ஆளும் உ.பி.யில் அடுத்த வருடம் துவக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு முன்கூட்டியே உ.பி.வாசிகளிடம் ஏபிபி மற்றும் சி-வோட்டர்ஸ் சார்பில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன.
இதில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் ஆளும் பாஜக மீது மீண்டும் உ.பி.வாசிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எனினும், இந்தமுறை அதன் தொகுதிகளின் எண்ணிக்கை சற்று குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சதவிகிதங்களில் பாஜகவிற்கு 41, அகிலேஷ்சிங் யாதவின் சமாஜ்வாதிக்கு 32, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 15, தலா 6 என காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளுக்கு கிடைக்கும்.
தொகுதிகள் எண்ணிக்கையில் பாஜகவிற்கு 241 முதல் 249 கிடைக்கிறது. சமாஜ்வாதிக்கு 130 முதல் 138 வரை கிடைக்கும். பகுஜன் சமாஜுக்கு முன்பை விடக் குறைவாக 15 முதல் 19, மற்றும் காங்கிரஸுக்கு 3 முதல் 7 வரை வெற்றி பெறும் எனக் கணித்துள்ளது.
இந்த கருத்து கணிப்புகள் லக்கிம்பூர் கேரி சம்பவத்திற்கு முன்பும், பின்பும் என எடுக்கப்பட்டுள்ளன. இதில், லக்கிம்பூர் கேரிக்கு பிந்தைய கணிப்பில் பாஜகவிற்கு சுமார் 20 தொகுதிகள் குறைந்துள்ளன.
இந்த 20 தொகுதிகள் சமாஜ்வாதிக்கு கூடுதலாகக் கிடைக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. லக்கிம்பூர் கேரி சம்பவத்திற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா காரணம் எனவும் ஒரு புகார் உள்ளது.
எனவே, இப்புகாரில் உள்ள உண்மை உள்ளதாக 61 சதவிகித உ.பி.வாசிகளும் இல்லை எனவும் இதர 39 சதவிகிதத்தினர் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். பொதுவாகவே லக்கிம்பூர் கேரி சம்பவத்தால் 70 சதவிகிதம் பேர் பாஜகவிற்கு இழப்பு ஏற்படும் என்றும் கூறியுள்ளனர்.