கரோனா தடுப்பூசி செலுத்தப்படாதடெல்லி அரசு ஊழியர்கள் அக்டோபர் 16 முதல் அலுவலகத்துக்கு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என டெல்லி தலைமைச் செயலாளர் அறிவித்துள்ளார்.
டெல்லி தலைமைச் செயலாளர் விஜய் தேவ் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
ஆசிரியர்கள், முன்களப் பணியாளர்கள் உள்ளிட்ட டெல்லி அரசின் அனைத்து ஊழியர்களும் அக்டோபர் 15-ம் தேதிக்குள் கரோனா தடுப்பூசி (குறைந்தபட்சம் முதல் டோஸ்) செலுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறு செலுத்திக் கொள்ளாத ஊழியர்கள் அவர்களின் அலுவலகங்கள் அல்லது சுகாதார நிலையங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் அக்டோபர் 16 முதல் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திக்கொள்ளும் வரை அவர்களுக்கு அனுமதியில்லை. அனுமதிக்கப்படாத நாட்களில் அவர்கள் விடுப்பில் இருப்பதாக கருதப்படுவார்கள்.
அனைத்து துறை தலைவர்களும் தங்களுக்கு கீழ் பணியாற்றுவோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்களா என ஆரோக்கிய சேது செயலி அல்லது தடுப்பூசி சான்றிதழ் மூலம் சரிபார்ப்பார்கள்.
இவ்வாறு அவர் தனது உத்தரவில் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தலைமைச் செயலாளர் விஜய் தேவ் கூறும்போது, “மத்திய அரசும் டெல்லியில் பணிபுரியும் தனது ஊழியர்களுக்கு இதேபோன்ற வழிகாட்டுதலை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்” என்றார். - பிடிஐ