முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு, பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் தொடர்புடைய லெக்ஸ் பிராப்பர்டீஸ் தொடர்ந்துள்ள சொத்தின் உரிமையாளரை முடிவு செய்யும் வழக்கில் தீர்ப்பு வரும்வரை, சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் கடந்த 26-ம் தேதி விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. ஜூன் 6-ம் தேதி வரை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து, திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பெங்களூரில் நடைபெறும் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை முடக்க, லஞ்ச ஒழிப்புத் துறை உதவியுடன் தொடர்ந்து முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தரப்பட்ட நெருக்கடி காரணமாக, சிறப்பு அரசு வழக்கறிஞராக இருந்த பி.வி.ஆச்சார்யா விலக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. பின்னர், அப்பதவிக்கு பவானிசிங் நியமிக்கப்பட்டார்.
இந்த வழக்கில் தொடர்புடைய சொத்துகள் முடக்கப்பட்ட போதே, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு, விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், இது தொடர்பான வழக்கு கடந்த மாதம் 26-ம் தேதி பெங்களூர் நீதிமன்றத்தில் வாபஸ் பெறப்பட்டு விட்டதால், உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு காலாவதி ஆகிவிடுகிறது.
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தொடர்புடைய முக்கிய வழக்குகளின் விசாரணையை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும் என்று கடந்த மார்ச் 10-ம் தேதி இதே உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கில் இறுதிக்கட்ட வாதம் நடைபெறவுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடை உத்தரவு, வழக்கின் விசாரணைக்கு குறுக்கீடாக இருப்பதால், தடையை நீக்கி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.