இந்தியா

திறன் வளர்ப்பு இந்தியாவுக்கு ரூ.1,700 கோடி

பிடிஐ

அடுத்த 3 ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு திறனை கூட்டும் வகையில் நாடு முழுவதும் 1,500 பன்முக திறன் பயிற்சி மையங்கள் மற்றும் திறன் மேம்பாடு சான்றளிப்பு தேசிய வாரியத்தை அமைக்க ரூ.1,700 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் 2016-17 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ‘‘இளம் சமுதாயத்தினருக்கு கல்வி, திறன் மற்றும் வேலைவாய்ப்பு வழங்குவது தான் அறிவார்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான வழியாகும். இதற்காக நாடு முழுவதும் 1,500 பன்முக திறன் பயிற்சி மையங்கள் அமைக்க ரூ.1,700 கோடி இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொழில் மற்றும் கல்வித் துறையின் பங்களிப்புடன் திறன் மேம்பாடு சான்றளிப்பு தேசிய வாரியத்தை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மையங்கள் மூலம் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்கள் திறன் பெற்றவர்களாக உருவாக்கப்படுவர்’’ என்றார்.

மேலும் ‘‘தீனதயாள் உபாத்யாயா கிராமீன் கவுசால்யா யோஜனா திட்டத்தின் கீழ் திறன் வளர்ப்பு சார்ந்த சேவைகள் வழங்கும் அமைப்புகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படும். திறன் வளர்ப்பு திட்டங்களுக்கான செலவுகளுக்கு வருமான வரி கழிவும் வரும் 2020, ஏப்ரல் 1-ம் தேதி வரை நீட்டிக்கப்படும்’’ என்றார்.

SCROLL FOR NEXT