ராஜஸ்தானில் போக்சோ வழக்கில்9 நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மாவட்டம் கோத்தவடா கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த செப்டம்பர் 26-ம் தேதி மாலையில் தெருவில் விளையாடி கொண்டிருந்தார். அந்த சிறுமியை, கமலேஷ் (25) என்பவர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்யவும் முயன்றார்.
அவரிடமிருந்து தப்பிய சிறுமிபெற்றோரிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறினார். அன்றிரவு சிறுமியின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த போலீஸ் அதிகாரிகள், வழக்கை விசாரிக்க 150 போலீஸாரை நியமித்தனர்.
கடந்த செப்டம்பர் 27-ம் தேதிமதியம் கமலேஷ் கைது செய்யப்பட்டார். அன்றைய தினமே டிஎன்ஏ பரிசோதனைக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டன. கடந்த 1-ம் தேதி பரிசோதனை அறிக்கை கிடைத்தது.
20 ஆண்டு சிறை
ஜெய்ப்பூர் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. அந்த நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கிய ஐந்தே நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளி கமலேஷுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் 2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து ஜெய்ப்பூர் தெற்கு போலீஸ் துணை ஆணையர் ஹரேந்திர குமார் கூறும்போது, "கடந்த செப்டம்பர் 26-ம் தேதி மாலையில் குற்றம் நிகழ்ந்துள்ளது. அன்றிரவு 11 மணிக்கு போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அப்போது முதலே போலீஸார் துரிதமாக செயல்பட்டனர். அடுத்த நாளே குற்றவாளி கைது செய்யப்பட்டார். போக்சோ நீதிமன்றம் மிக விரைவாக விசாரணையை நடத்தியது. இதன்காரணமாக குற்றம் நிகழ்ந்த 9 நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட்டது" என்று தெரிவித்தார்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போலீஸாருக்கும் நீதித் துறைக்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.