கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான தர்ஷன், தனியாக பிரிந்து வாழும் மனைவி விஜயலட்சுமியை அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. மேலும் விஜயலட்சுமியின் வீட்டில் பணியாற்றி வரும் பாதுகாவலர் தேவராஜையும் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆவேசமடைந்த விஜயலட்சுமி பெங்களூரு போலீஸில் தர்ஷன் மீது புகார் அளித்தார். அதன் அடிப்படையில், விசாரணைக்காக நேரில் ஆஜரா கும்படி தர்ஷனுக்கு பெங்களூரு தெற்கு மாநகர துணை காவல் ஆணையர் லோகேஷ் குமார் உத்தரவிட்டிருந்தார். ஆனால் தர்ஷன் ஆஜராகாததால் அவரை கைது செய்ய போலீஸார் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தர்ஷன் நேற்று துணை காவல் ஆணையர் லோகேஷ் குமார் முன்னிலையில் ஆஜரானார்.
அப்போது விஜயலட்சுமி தனக்கு எதிராக தொடர்ந்து பொய் புகார் அளித்து வருவதாகவும், வேறு சிலருடன் இணைந்து தனக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அங்கிருந்து, கர்நாடக அமைச்சரும், மூத்த நடிகருமான அம்பரீஷ் இல்லத்துக்கு சென்ற தர்ஷன் இந்த விவகாரம் குறித்து 2 மணி நேரம் வரை அவரிடம் ஆலோசனை நடத்தினார். இதன் காரணமாக தர்ஷன் மீதான புகாரை வாபஸ் பெறும்படி விஜயலட்சுமிக்கு, அம்பரீஷ் அறிவுறுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.