இந்தியா

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி: பிரதமர் மோடி திட்டவட்டம்

செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு மருத்துவக் கல்லூரி அமைப்பதே அரசின் நோக்கம் என பிரதமர் மோடி கூறினார். பி.எஸ்.ஏ. ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை இன்று தொடங்கி வைத்தபோது அவர் இதனை கூறினார்.

35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 35 பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிஎம் கேர்ஸ் நிதியத்தின் கீழ் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிறுவப்பட்டுள்ள 35 பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டன.

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

நாட்டின் சுகாதாரத் துறையை பாராட்டுகிறேன். ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு மருத்துவக் கல்லூரி அமைப்பதே அரசின் நோக்கம். 6-7 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு சில மாநிலங்களில் மட்டுமே எய்ம்ஸ் மருத்துவமனை இருந்தது.

இன்று, எய்ம்ஸ் மருத்துவமனையை ஒவ்வொரு மாநிலத்திலும் உருவாக்கும் பணி நடந்து வருகிறது. 22 எய்ம்ஸ் மருத்துவமனை என்ற வலுவான நெட்வொர்க்கை உருவாக்க வேகமாக பணியாற்றுகிறோம்.

நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு மருத்துவக் கல்லூரி இருக்க வேண்டும் என்பதே அரசின் குறிக்கோளாகும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

SCROLL FOR NEXT