உத்தரபிரதேசத்தில் வன்முறையில் இறந்த 4 விவசாயிகள் மற்றும் ஒரு பத்திரிகையாளர் குடும்பங்களுக்கு தலா ரூ. 50 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப் மாநில முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.
உத்தரபிரதேசம் லக்கிம்பூரில் சமீபத்தில் ஏற்பட்ட வன்முறையில் விவசாயிகள் 4 பேர், பத்திரிகை யாளர் ஒருவர், பாஜகவினர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக லக்கிம்பூர் செல்ல காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் ஆகியோர் லக்னோ வந்தனர். அப்போது, செய்தியாளர்களிடம் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி கூறியதாவது:
கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம். லக்கிம் பூரில் நடந்த வன்முறை ஜாலியன் வாலாபாக் வன்முறைச் சம்பவத்தை நினைவூட்டுகிறது.
உ.பி.யில் பாஜக தலைமை யிலான அரசு ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கி வருகிறது. லக்கிம்பூர் வன்முறையில் இறந்த 4 விவசாயிகள் மற்றும் ஒரு பத்திரிகையாளரின் குடும்பங் களுக்கு பஞ்சாப் அரசு சார்பில் தலா ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
இவ்வாறு சரண்ஜித் சிங் சன்னி கூறினார். இதேபோல, லக்கிம்பூர் வன்முறைக்கு கண்டனம் தெரிவித்த சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், இறந்த விவசாயிகள் 4 பேர் மற்றும் பத்திரிகையாளர் குடும்பங் களுக்கு சத்தீஸ்கர் மாநில அரசு சார்பிலும் தலா ரூ.50 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.-பிடிஐ