லக்கிம்பூர் கேரி பகுதியில் கார் விபத்து ஏற்படுத்திய ஆசிஷ் மிஸ்ராவின் தந்தையும், மத்திய அமைச்சருமான அஜய் மிஸ்ராவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று சந்தித்து பேசினார்.
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் கடந்த 3-ம் தேதி பாஜக சார்பில் ஒரு நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. அதில் மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா பங்கேற்கவிருந்தார். இதனிடையே, அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் அங்கு போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்.
அமைச்சர் மகன் கார்
இந்நிலையில், அந்த வழியாக சென்ற மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் கார் அங்கிருந்த விவசாயிகள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் 4 விவசாயிகள் உயிரிழந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், அந்தக் கார் உட்பட மத்திய அமைச்சரின் ஆதரவாளர்கள் கார்களையும் சிறைப்பிடித்து தீ வைத்தனர்.
இதன் தொடர்ச்சியாக, விவசாயிகளுக்கும், பாஜகவினருக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்றது. இதில் கட்சித் தொண்டர்கள் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் கார் மோதியதில் 4 விவசாயிகள் மற்றும் செய்தி சேகரிக்க சென்றிருந்த பத்திரிகையாளர் ஒருவர் என மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க செல்லும் அரசியல் தலைவர்களை மாநில அரசு தடுத்துள்ளது.
ராஜினாமா கோரி போராட்டம்
இந்த சம்பவம் உத்தரபிரதேச விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விவசாயிகள் மீது ஆசிஷ் மிஸ்ராவின் கார் மோதிய வீடியோ காட்சிகளும் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று, மத்திய அமைச்சர் பதவியில் இருந்து அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்ய வலியுறுத்தி விவசாயிகள் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த விவகாரம் பாஜகவுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாக, அஜய் மிஸ்ராவை ராஜினாமா செய்யுமாறு கட்சித் தலைமை அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த சூழலில், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று சந்தித்து பேசினார். சுமார் ஒரு மணிநேரம் இந்த பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. அஜய் மிஸ்ராவுக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், அவரை அமித் ஷா சந்தித்து பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.