இந்தியா

ஸ்ரீநகரில் காஷ்மீர் பண்டிட் சுட்டுக் கொலை; தீவிரவாதிகளுக்கு டாக்டர் மகள் பகிரங்க சவால்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

செய்திப்பிரிவு

‘‘என் தந்தையின் உடலைத்தான் தீவிரவாதிகள் கொல்ல முடியும். அவரது ஆன்மா அழிவில்லாதது. என்னுடன் நேரில் விவாதம் நடத்த தீவிரவாதிகளுக்கு துணிவிருக்கிறதா?’’ என்று சுட்டுக் கொல்லப்பட்ட காஷ்மீர் பண்டிட்டின் டாக்டர் மகள் பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.

காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகில் இக்பால் பார்க் பகுதியில் மருந்துக் கடை நடத்தி வந்த காஷ்மீர் பண்டிட் மக்கன் லால் பிந்த்ரூ (68), பேல்பூரி வியாபாரி வீரேந்திர பஸ்வான், டாக்ஸி ஓட்டுநரும் டாக்ஸி ஸ்டேண்ட் சங்கத் தலைவருமான லோன் ஆகிய 3 பேரை தீவிரவாதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொன்றனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை மருந்துக் கடைக்குள் புகுந்த தீவிரவாதிகள், மக்கன் லால் மீது சரமாரியாக கைத் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 4 குண்டுகள் பாய்ந்து மக்கன் லால் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், அவரது மகளும் டாக்டருமான ஷிரத்தா பிந்த்ரூ நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அப்பாவி மக்களை கொல்வதன் மூலம் தங்களது கோழைத்தனத்தை தீவிரவாதிகள் வெளிப்படுத்துகின்றனர். என் தந்தை காஷ்மீர் பண்டிட். அவர் எப்போதும் சாக மாட்டார். ஆன்மாவாகவும், மக்கள் மனதிலும் எப்போதும் நிறைந்திருப்பார்.

அவருடைய உடலைத்தான் தீவிரவாதிகளால் கொல்ல முடியும். ஆன்மாவை அல்ல. தீவிரவாதிகளுக்கு துணிவிருந்தால் என்னுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த வரட்டும். அதன்பிறகு அவர்களுக்கு என்ன தேவை என்பதை முடிவு செய்யட்டும்.

இந்தத் தீவிரவாதிகள் கற்களைவீசி அப்பாவி பொது மக்களைத்தான் கொல்ல முடியும். அவர்களால் அது மட்டும்தான் செய்ய முடியும். நேருக்கு நேர் விவாதம் நடத்த அவர்களுக்கு துணிச்சல் கிடையாது. என் தந்தை போர் வீரனைப் போல வாழ்ந்தவர். அதனால் நான் அழ மாட்டேன். சிரித்த முகத்துடன் இருப்பேன்.

என் தந்தை பயமின்றி வாழ்ந்தார். காஷ்மீரில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகமாக இருந்த போதும் (கடந்த 1990-களில்) நகரில் உள்ள மருந்துக் கடையை மூட மறுத்துவிட்டார். அவர் வெற்றியாளராக வாழ்ந்து சென்றுள்ளார். அதனால் நான் அழப்போவதில்லை. அதுதான் அவருக்கு நான் செலுத்தும் மரியாதை.

பயமின்றி வாழ வேண்டும் என்பதைதான் என் தந்தை எனக்கு கற்றுத் தந்தார். ‘உங்களுக்கு பயம் இல்லையா?’ என்று என் தந்தையை அடிக்கடி கேட்பேன். அதற்கு அவர், ‘‘பயத்தில் வாழ்ந்தால், ஒவ்வொரு நாளும் நான் வாழ்வது மிகவும் கடினம். நான் இறந்தால், அது ஒரு முறைதான்’’ என்று கூறுவார். எதற்காக நாம் பயப்பட வேண்டும். பயம் இல்லாமல் இருப்பதுதான் வாழ்க்கை. பயம்தான் மரணம்.

இவ்வாறு ஷிரத்தா பிந்த்ரூ கூறினார். இவருடைய பேட்டி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் பாஜக கவுன்சிலரும் காஷ்மீர் பண்டிட்டுமான ராகேஷ் பண்டிடாவை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். அவரை கொன்ற தீவிரவாதியை காஷ்மீர் பாதுகாப்புப் படையினர் சமீபத்தில் சுட்டுக் கொன்றனர். இந்நிலையில், காஷ்மீர் பண்டிட் மக்கன் லால் பிந்த்ரூவை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT