"எனது தொழிலில் என் மகன் எவ்விதத்திலும் சம்பந்தப்படவில்லை. எனவே, என் மகன் மீது யாரும் பழி சொல்லாதீர்க்கள் வேண்டுமானால் என்னை திட்டிக் கொள்ளுங்கள்" என தொழிலதிபர் விஜய் மல்லையா தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
பாரத ஸ்டேட் வங்கி உட்பட 17 வங்கிகளிடம் வாங்கிய 9,000 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாத தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவிலிருந்து கடந்த 2-ம் தேதி வெளியேறினார்.
மல்லையா வங்கிகளிடம் வாங்கிய கடனை முறையாக திருப்பிச் செலுத்தாவிட்டால் சட்டரீதியாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என நாடாளுமன்றத்திலேயே நிதியமைச்சர் ஜேட்லி எச்சரித்திருக்கிறார்.
இந்நிலையில், விஜய் மல்லையா நாட்டைவிட்டு வெளியேறியது முதல் அவரது மகன் சித்தார்த் மல்லையா ட்விட்டரில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
இதனைத் தொடர்ந்து விஜய் மல்லையா தனது ட்விட்டரில், "எனது தொழிலில் என் மகன் எவ்விதத்திலும் சம்பந்தப்படவில்லை. எனவே, என் மகன் மீது யாரும் பழி சொல்லாதீர்க்கள் வேண்டுமானால் என்னை திட்டிக் கொள்ளுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.