இந்தியா

பிலாய் உருக்கு ஆலையில் விஷவாயுக் கசிவு: 6 பேர் பலி

செய்திப்பிரிவு

சத்தீஸ்கர் மாநிலம், பிலாய் உருக்கு ஆலையில் வியாழக்கிழமை மாலை விஷவாயுக் கசிவு ஏற்பட்டதில் 6 பேர் இறந்தனர்.

இது தொடர்பாக அம்மாநில அரசு நீதிவிசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், நேற்று மேலும் நால்வருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலம், துர்க் மாவட்டம், பிலாய் நகரில் இந்திய உருக்கு ஆணையத்துக்கு (செயில்) சொந்தமான உருக்கு ஆலை உள்ளது. இங்கு வியாழக்கிழமை மாலை கார்பன் மோனாக்ஸைடு வாயுக்கசிவு ஏற்பட்டதில் 36 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 2 துணை பொது மேலாளர்கள் உள்பட 5 பேர் மருத்துவ சிகிச்சையின் போது உயிரிழந்தனர். சம்பவ இடத்திலிருந்து விகாஸ் வர்மா என்ற ஒப்பந்தத் தொழிலாளியின் உடல் பின்னர் மீட்கப்பட்டது.

இந்நிலையில் பிலாய் ஆலையில் மற்றொரு பகுதியில் பணியாற்றிய நால்வருக்கு வெள்ளிக்கிழமை மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை என அதிகாரிகள் கூறினர்.

இதனிடையே வியாழக்கிழமை மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 21 பேர் சிகிச்சைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 9 பேர் மட்டுமே தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். இவர்கள் அபாய கட்டத்தை கடந்துவிட்டதாக ‘செயில்’ தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்தை ‘செயில்’ தலைவர் சி.எஸ்.வர்மா வெள்ளிக் கிழமை காலை பார்வையிட்டார். அவர் நிருபர்களிடம் கூறுகை யில், “விபத்து குறித்து உயர் நிலைக் குழு விசாரணை மேற் கொள்ளும். வாயுக்கசிவால் பாதிக்கப்பட்டவர் களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்” என்றார்.

“விபத்து குறித்து துர்க் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என துர்க் மாவட்ட ஆட்சியர் ஆர்.சங்கீதா கூறினார்.

பிரதமர் இரங்கல்

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங்கை வெள்ளிக்கிழமை தொலைபேசியில் அழைத்து, அங்குள்ள நிலவரத்தை கேட்டறிந் தார். விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த மோடி, பாதிக்கப்பட்டவர் களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தினார்.

முழு விசாரணைக்குராகுல் கோரிக்கை

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில், “விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த துயரை தெரிவிக்கிறேன். இவ்விபத்து குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்” என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT