காஷ்மீர் மாநிலத்தில் வெவ்வேறு இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். அனைத்து கொலைவெறி தாக்குதல் சம்பவமும் 1 மணி நேரத்துக்குள் நடந்து முடிந்தது.இதனால் பாதுகாப்புப் படையினர் அதிர்ந்து போயினர்.
ஒரு மருந்துக்கடை ஊழியர், தெருவோர வியாபாரி, கார் ஓட்டுநர் என மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பிந்த்ரூ பார்மஸி என்பது ஸ்ரீநகரில் இக்பால் பூங்கா பகுதியில் பல ஆண்டுகளாக இயங்கும் மருந்துக் கடை. இந்தக் கடையின் உரிமையாளர் மக்கன் லால் பிந்த்ரூ (70). நேற்றிரவு 7 மணியளவில் இவரது கடைக்கு வந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் பிந்த்ரூவில் தலையிலேயே சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச் சென்றார். அப்பகுதியில் இருந்தோர் இச்சம்பவத்தால் அதிர்ந்து போயினர். 1990களில் தீவிரவாதம் உச்சத்தில் இருந்தபோதும் கடையை மூடாமல் இருந்து மக்கள் சேவை செய்தவர் பிந்த்ரூ.
பிந்த்ரூ மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தால், அவரது கடையை சுற்றியுள்ள பகுதி சீல் வைக்கப்பட்டு தீவிரவாதி தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது. பிந்த்ரூ காஷ்மீர் பண்டிட் வகுப்பைச் சேர்ந்தவர்.
இதேபோல், ஸ்ரீநகர் லால் பஜார் பகுதியில் ஒரு கார் ஓட்டுநர் ஒருவர் தீவிரவாதியால் சுட்டுக் கொல்லப்பட்டார். உயிரிழந்தவர் வீரேந்திர பஸ்வான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் பிஹார் மாநிலம் பாகல்பூர் பகுதியைச் சேர்ந்தவர்.
அடுத்ததாக பந்திப்பூராவில் முகமது ஷாஃபி என்ற நபர் கொல்லப்பட்டார். பொதுமக்களில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் காஷ்மீரில் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்துக்கு ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், பிந்த்ரூ மிகவும் கனிவான நபர் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஸ்ரீநகரில் தீவிரவாத அச்சுறுத்தல் உச்சத்தில் இருந்தபோதும் கூட அவர் தனது கடையை மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைப்பார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில் மாநிலம் முழுவதும் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. காஷ்மீரில் அண்மைக்காலமாகவே அப்பாவி பொதுமக்கள் மீதான தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. கடந்த 4 நாட்களில் பொதுமக்கள் 4 பேர் கொல்லப்பட்டனர்.