உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
லக்கிம்பூர் செல்ல முயன்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நேற்று 2-வது நாளாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். அவரை விடுவிக்கக் கோரி இரு நாட்களாக காங்கிரஸார் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 3-ம் தேதி உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூரில் விவசாயிகளுக்கும் பாஜகவின ருக்கும் இடையே மோதல் மூண்டு கலவரம் ஏற்பட்டது. இதில் 4 விவசாயிகள், 4 பாஜக வினர், ஒரு செய்தியாளர் என 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
உத்தர பிரதேச அரசு, விவசாய சங்க தலை வர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இந்த உடன்பாட் டின்படி, கலவரம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.45 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, காயமடைந்த விவசாயிகளுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்தது.
லக்கிம்பூர் கலவரத்தில் உயிரிழந்த விவசாயிகள் நட்சத்திரா சிங் (55), தல்ஜித் சிங் (35), லாவேபிரித் சிங் (20), குருவேந்திர சிங் (18) ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதில் குருவேந்திர சிங்கின் உடலில் குண்டு காயங்கள் இருப்பதாகவும் ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் குண்டு காயம் குறிப்பிடப்படவில்லை என்று கூறி விவசாயிகள், குடும்பத்தினர் நேற்று போராட்டம் நடத்தினர்.
குருவேந்திர சிங்கின் உடல் பேராச் நகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. டெல்லி மருத்துவர்கள் மூலம் அவரது உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத் தினர். மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
விவசாயிகள் சங்க கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா நேற்று வெளியிட்ட அறிக்கையில், "லக்கிம்பூர் கலவரத்தில் 4 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இதில் 3 பேர் வாகனம் மோதி கொலை செய்யப்பட்ட னர். மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா வின் மகன் ஆசிஷ் மிஸ்ரா, ஒரு விவசாயியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார். அவரை உடனடியாக கைது செய்ய வேண் டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா கூறும்போது, "விவசாயிகள் மீது மோதிய கார் எங்களுடையது. காரில் இருந்த ஓட்டுநர், 2 பாஜக தொண்டர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் மட்டும் தப்பியோடிவிட்டார். விவசாயிகள் போர்வையில் தீவிரவாதிகள் வன்முறையில் ஈடுபடுகின்றனர். சம்பவ இடத்தில் நானோ, எனது மகனோ இல்லை. எனது மகன் 4 கி.மீ. தொலைவில் வேறோரு இடத்தில் நிகழ்ச்சி நடத்தினார். எங்கள் மீது அபாண்டமாக குற்றம் சாட்டப்படுகிறது" என்றார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று முன்தினம் லக்கிம்பூருக்கு காரில் சென்றார். சீதாபூரில் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். 144 தடையுத்தரவை மீறிய தாக கைது செய்யப்பட்ட அவர் அங் குள்ள விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
அவர் உட்பட 11 காங்கிரஸார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக உள்ளூர் மாஜிஸ் திரேட்டிடம் போலீஸார் அறிக்கை அளித்தனர். அப்போது குறிப்பிட்ட சில பிரிவுகளை நீக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனிடையே லக்கிம்பூர் பகுதியில் விவ சாயிகள் மீது கார் மோதும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுதொடர்பாக பிரியங்கா காந்தி ட்விட்டரில் நேற்று வெளியிட்ட வீடியோவில், "மத்திய இணையமைச்சரின் மகன் விவசாயிகள் மீது காரை மோதியுள்ளார். அமைச்சர் , அவரது மகனை இதுவரை கைது செய்யாதது ஏன்? இதற்கு பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும். குற்றவாளிகளை கைது செய்யாமல், எதிர்க்கட்சி தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தடுப்பு காவ லில் வைக்கப்பட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி லக்கிம்பூருக்கு நேரில் வந்து பாதிக்கப் பட்ட விவசாயிகளை சந்திக்க தயாரா" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சீதாபூரில் உள்ள விருந்தினர் மாளிகையில் பிரியங்கா காந்தி 2-வது நாளாக நேற்றும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்தார். அவர் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படு வார் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரி வித்துள்ளன. விருந்தினர் மாளிகை முன்பு கடந்த 2 நாட்களாக காங்கிரஸார் போராட்டம் நடத்தி வருகின்றனர். அங்கு காங்கிரஸ் தொண்டர்கள் நேற்று கூடாரம் அமைக்க முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்த போது இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. பிரியங்கா காந்தியை விடுவிக்கக் கோரி உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸார் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகேல் நேற்று விமானத்தில் லக்னோ சென்றார். விவசாயிகள் மற்றும் பிரியங்கா காந்தியை சந்திக்க செல்வதாக போலீஸாரி டம் அவர் கூறினார். இதற்கு போலீஸார் அனுமதி வழங்கவில்லை. இதனால் விமான நிலையத்திலேயே பூபேஷ் பாகேல் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.
பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி நேற்று டெல்லி சென்றார். லக்கிம்பூர் கலவரம் தொடர்பாக ஆலோசிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க அவர் நேரம் ஒதுக்க கோரியுள்ளார். அவர் கூறும்போது, "லக்கிம்பூர் கலவரம், ஜாலியன்வாலாபாக் படுகொலை போன்றது. இந்த கலவரத்தில் தொடர்புடைய அனைவரை யும் கைது செய்ய வேண்டும். பிரியங்கா காந்தியை விடுதலை செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.
லக்கிம்பூர் கலவரம் தொடர்பாக வழக் கறிஞர்கள் சிவகுமார் திரிபாதி, சி.எஸ்.பாண்டா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:
புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது. இதை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் அமைதி வழியில் போராட்டம் நடத்தி வருகின்ற னர். கரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு நடுவிலும் அவர்கள் போராடு கின்றனர்.
இந்த சூழலில் உத்தர பிரதேசத்தின் லக்கிம் பூரில் விவசாயிகள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்த விசாரணையை உச்ச நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.
லக்கிம்பூர் கலவரம் தொடர்பாக அலகா பாத் உயர் நீதிமன்றத்தில் தன்னார்வ தொண்டு அமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் கலவரம் தொடர்பாக சிபிஐ விசா ரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.