டெல்லியில் நேற்று இந்திய விமானப் படை தொடங்கியதன் 89-ம் ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற விமானப்படைத் தளபதி வி.ஆர். சவுத்ரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியா-சீனா இடையேயுள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் (எல்ஏசி) சீனா தனது துருப்புகளை அதிகரித்து வருகிறது. மேலும் அங்கு ஏராளமான படைகலன்களும் குவிக்கப்பட்டு வருகின்றன. துருப்புகளை குறைப்பது தொடர்பாக இந்தியா, சீனா இடையே ராணுவ அதிகாரிகள் நிலையில் இதுவரை 12 முறை பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது.
அதே நேரத்தில் சீனாவிடமிருந்து வரும் எந்த சவாலையும் சமாளிக்கும் விதத்தில் இந்தியப்படைகள் தயார் நிலையில் உள்ளன. அதே அளவுக்கு இந்தியப்பகுதிகளிலும் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் தாக்குதல் நடத்துவதற்கு வசதியாக ரஃபேல் போர் விமானங்கள் தயாராக உள்ளன. விரைவில் நமது படைக்கு அதிநவீன போர்க்கருவிகளை வாங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்.
இதேபோல் பாகிஸ்தானுடனான எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியிலிருந்து (எல்ஓசி)வரும் சவால்களை எதிர்கொள்ள இந்திய விமானப் படை தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். - பிடிஐ