உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில், 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் கூட்டு சதி செய்ததாக சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. ஆனால், அவர்களை விடுதலை செய்து 2001-ல் விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ல் உறுதி செய்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத் தில் சிபிஐ சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. பாபர் மசூதி வழக்கை தொடர்ந்தவர்களில் ஒருவரான ஹாஜி மஹபூப் அஹமது என்பவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இதையடுத்து அத்வானி, ஜோஷி, பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது உ.பி. முதல்வ ராக இருந்த கல்யாண் சிங் (தற்போது இமாச்சலப் பிரதேச ஆளுநர்), உமாபாரதி ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஹாஜி மஹபூப் அஹமது தனது மேல்முறையீட்டு மனுவில், சிபிஐ.யின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ அளித்த பதிலில், ‘‘சிபிஐ சட்டப்படி தனிப்பட்ட முறையில் செயல்படுகிறது. ஒவ்வொரு படிநிலையிலும் அதிகாரிகள் வழக்கை கவனமாக ஆய்வு செய்துதான் முடிவெடுக்கின்றனர். இதில் யாருடைய தலையீடும் இல்லை’’ என்று தெரிவித்தது.
இந்நிலையில், கூட்டு சதியில் இருந்து அத்வானி உள்ளிட்டோரை விடுவித்ததை எதிர்த்து தொடரப் பட்ட மேல்முறையீட்டு வழக்கை நீதிபதி கோபால கவுடா, நீதிபதி அருண் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
இந்நிலையில், இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரிக்க நீதிபதி கோபால கவுடா மறுத்துள் ளார். அதற்கான காரணம் எதையும் நீதிபதி கோபால கவுடா கூற வில்லை. ‘‘இந்த வழக்கு தற்போது தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட் டுள்ளது. வழக்கை வேறு ஒரு அமர்வுக்கு அவர் பரிந்துரைப்பார்’’ என்று நீதிபதி கோபால கவுடா நேற்று தெரிவித்தார்.