இந்தியா

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த இருவர் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை

இரா.வினோத்

பெங்களூரு பாஜக தலைமை அலுவலகத்தில் குண்டு வெடித்த வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த இருவரை கர்நாடக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். தீவிர விசா ரணைக்கு பிறகு, இருவரும் நேற்று பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த 2013 -ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் குண்டு வெடித்தது. சக்தி குறைந்த இந்த குண்டுவெடிப்பில் 3 மாணவிகள் உட்பட‌18 பேர் காயமடைந்தனர்.

இது தொடர்பாக கர்நாடக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்த போது, குண்டு வெடிப் பில் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் தமிழ்நாட்டு பதிவெண் கொண்டது என தெரிய வந்தது.

இவ்வழக்கில் முக்கிய குற்ற வாளியாக சந்தேகிக்கப்பட்ட பற‌வை பாட்ஷா கடந்த 2014-ம் ஆண்டு கேரளாவில் கைது செய்யப் பட்டார். அவரிடம் விசாரித்ததில் திருநெல்வேலியைச் சேர்ந்த சையத் அலி (29), ஜான் ஆசிர் (35) ஆகிய இருவரும் வெடிமருந்து களை வழங்கியதாக தெரிவித்தார். அதன் அடிப்படையில் கர்நாடக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இந்த இருவரையும் தேடி வந்தனர்.

இந்நிலையில் மற்றொரு வழக்கில் பூந்தமல்லி நீதிமன்றத் தில் ஆஜராக வந்த இருவரையும் கர்நாடக போலீஸார் கைது செய்தனர். இருவரையும் மஃப்டி உடையில் இருந்த போலீஸார் பெங்களூரு கொண்டுவர முற்பட்ட போது, தமிழக போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து பெங்களூரு குற்றப்பிரிவு கூடுதல் ஆணை யரும், தமிழருமான ஹரிசேகரன் குறுக்கிட்டு, பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு குறித்தும், கர்நாடக போலீஸாரின் விசாரணை குறித்தும் தெளிவுபடுத்தினார்.

இதையடுத்து மத்திய குற்றப் பிரிவு போலீஸார் சையத் அலி, ஜான் ஆசிர் ஆகிய இருவரையும் பெங்களூரு அழைத்து வந்தனர். இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.

இதையடுத்து இருவரும் நேற்று பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT