இந்தியா

காங்கிரஸ் வாக்குகளை பிரித்த ஆம் ஆத்மி: குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி

செய்திப்பிரிவு

குஜராத் மாநிலம் காந்திநகர் மாநகராட்சி (ஜிஎம்சி) தேர்தலில் பாஜக 44 இடங்களில் 41 இடங்களைகளை கைபற்றி பெரும் சாதனை படைத்துள்ளது. ஆம் ஆத்மி முதன்முதலில் போட்டியிட்ட இந்த தேர்தலில் மும்முனை போட்டி நிலவியது.

காந்திநகர் மாநகராட்சியில் உள்ள 44 இடங்களுக்கு கடந்த 3-ம் தேதி நடைபெற்றது. மொத்தம் 162 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆளும் கட்சியான பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மட்டுமின்றி இந்த முறை, ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டது.

இதனால் மும்முனைப் போட்டியாக இந்த தேர்தல் அமைந்தது. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் 44 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தின. ஆம் ஆத்மி 40 இடங்களில் வேட்பாளர்களை களமிறக்கியது.

இதுமட்டுமின்றி பகுஜன் சமாஜ் கட்சி 14 வார்டுகளில் போட்டியிட்டன. தேசியவாத காங்கிரஸ் இரு இடங்களிலும் மற்ற கட்சிகள் ஆறு இடங்களிலும், 11 சுயேட்சைகளும் போட்டியிட்டனர்.

இந்ததேர்தலில் சுமார் 56.24 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. மொத்தமுள்ள 44 இடங்களில் 41 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. காங்கிரஸ் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது.

ஆம் ஆத்மி ஓரிடத்தில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி 17 சதவீத வாக்குகள் பெற்றதால் எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எதிர்ப்பு வாக்குகள் சிதறியதால் பாஜக பெரும் வெற்றி பெற்றுள்ளது. முதன்முறையாக காந்திநகர் மாகராட்சியை சுயேட்சைகள் ஆதரவு இல்லாமல் பாஜக கைபற்றியுள்ளது.

இதுமட்டுமின்றி மேலும் 3 நகராட்சிகளுக்கு நடந்த தேர்தலிலும் பாஜக பெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் வாக்குகளை ஆம் ஆத்மி பெற்றதால் பாஜக வெற்றி எளிதானது.

குஜராத்தின் முதல்வராக பூபேந்திர படேல் பொறுப்பேற்ற பிறகு நடந்த முதல் பெரிய தேர்தல் இது என்பது குறிப்பிடத்துக்கது.

SCROLL FOR NEXT